இலங்கை

தென்கொரிய மனித உரிமைகளுக்கான விருதை வென்ற இலங்கை தமிழ்ப் பெண்

Published

on

தென்கொரிய மனித உரிமைகளுக்கான விருதை வென்ற இலங்கை தமிழ்ப் பெண்

தென் கொரிய மே 18 நினைவு அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகளுக்கான குவாங்ஜு பரிசு தமிழ் பெண்கள் உரிமை ஆர்வலர் சுகந்தினி மதியமுதன் தங்கராசுக்கு ( Suganthini Mathiyamuthan Thangaras) வழங்கப்பட்டுள்ளது.

“அமரா” அமைப்பில் இணைந்துள்ள சுகந்தினி, இலங்கை அரசு மற்றும் அதன் பாதுகாப்புப் படையினரால் ஏற்படுத்தப்படும் அடக்குமுறை மற்றும் துன்பங்களுக்கு எதிராக தமிழர் தாயத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகள் மற்றும் வலுவூட்டல்களுக்காகப் போராடியுள்ளார்.

சுகந்தினி பாலியல் வன்முறை மற்றும் 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பியவர்.

இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த ஏராளமான பெண்களுக்கு தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இவர் திகழ்வதாக மே 18 அறக்கட்டளை கூறியுள்ளது.

இந்தநிலையில் சுகந்தினியின் செயற்பாடுகள் மே 18இன் உணர்வுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாக தாம் நம்புவதாகவும், இலங்கையில் தமிழ் பெண்களின் மனித உரிமை நிலைமையை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளை தாம் ஆதரிப்பதாக குவாங்ஜு 2024 மனித உரிமைகளுக்கான நடுவர் குழுவின் தலைவர் Song Seon-tae கூறியுள்ளார்.

சிங்கள அரசின் அடக்குமுறையிலிருந்து தமிழர்களை விடுவிப்பது மற்றும் இலங்கை இராணுவ எந்திரத்தின் பாலியல் வன்முறைகளில் இருந்து தமிழ்ப் பெண்களைக் காப்பது என்ற நோக்கத்திலேயே தமது போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுகந்தினி குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சியின் கீழ் பெண்களின் பாதுகாப்பும் கௌரவமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக சுகந்தினி கூறியுள்ளார் நள்ளிரவில் கூட பெண்கள் பயமின்றி பாதுகாப்பாக பயணம் செய்யும் நிலை இருந்துள்ளது.

தாம் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பிரபல தளமான ஜோசப் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு தாம் பயங்கரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக சுகந்தினி குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில், அவர்கள் தம்மை இடைவிடாமல் சித்திரவதை செய்தனர் என்றும் முகாமின் தலைவர் முதல் சக இராணுவத்தினர் வரை அவர்கள் தொடர்ந்து தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக சுகந்தினி தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் நிர்வாணப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதே அறையில் மேலும் 11 பெண்கள் அதேபோன்ற நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக சுகந்தினி கூறியுள்ளதோடு துரதிஸ்டவசமாக அவர்களில் இருவர் இறந்துள்ளனர் என்றும் சுகந்தினி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version