இலங்கை

ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையை கேள்விக்குட்படுத்திய இலங்கை அரசாங்கம்

Published

on

ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையை கேள்விக்குட்படுத்திய இலங்கை அரசாங்கம்

போர் மௌனிக்கப்பட்டு 15 வருட நிறைவில் வெளியாகியுள்ள ஐக்கிய நாடுகளின் (United Nations)மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை இலங்கை (Sri Lanka) முற்றாக நிராகரித்துள்ளதுடன் அதன் ஆணை மற்றும் அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தையும் இலங்கை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே, இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக்கூறலைக் கோரியிருந்தது.

குறித்த அறிக்கையானது இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் என்ற தலைப்பில் அமைந்த 45 பக்க அறிக்கையாக காணப்பட்டது.

இந்த அறிக்கையில் இலங்கையில் தொடரும் பொறுப்புக்கூறலின் பற்றாக்குறை பற்றிக் குறிப்பிட்டு உள்நாட்டு மட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நீதி மற்றும் பிற தொடர்புடைய செயல்முறைகள விடயத்தில் சர்வதேச சமூகம் இலங்கையுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், உலகளாவிய அதிகார வரம்பு அல்லது பிற அதிகார வரம்புகளைப் பயன்படுத்தி விசாரணைகள் மற்றும் வழக்குகளைத் தூண்டுதல் மற்றும் இலக்குத் தடைகள் தேவை என்று அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

எனினும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளார்.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட காலப்பகுதியை நோக்கும்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குற்றச்சாட்டுகள் முழுவதையும் அரசியலாக்குவது போல் தெரிகிறது என்று உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் அவர் கூறியுள்ளார்.

மூத்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற, தெளிவற்ற மற்றும் பக்கச்சார்பான அறிக்கையை வெளியிட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் (Volker Türk) எந்த உறுப்பு நாடுகளாலும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜெனீவாவுக்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக்கவும், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை ஆட்சேபித்துள்ளார்.

இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான அவரது ஒருதலைப்பட்ச முயற்சி குறித்து ஹிமாலி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரகத்தின் நெறிமுறை மீறல் என்பதோடு இது குறித்து மற்ற உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடவுள்ளதாக ஹிமாலி குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் தற்போது மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகின் பல்வேறு இடங்களில் மனித உரிமை மீறல்கள் நடக்கும் நேரத்தில் இலங்கையை மட்டும் ஏன் உயர்ஸ்தானிகரகம் குறிவைக்கவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் பிந்திய அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயங்களில் முதன்முறையாக, ஜே.வி.பி தலைமையிலான 1971 கிளர்ச்சி மற்றும் 1987 முதல் 1989 வரையான காலத்தில் மரணித்த மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பியும் போட்டியிடுகிறது.

இந்த அரசியல் சூழலில் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து ஆயுத மோதல்களின் போது உயிரிழந்த அனைவரையும் நினைவுகூருவதற்கு தாம் ஆதரவளிப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு மத்தியில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி 1971ஆம் ஆண்டு இறந்து போன மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க முயற்சிப்பது கூட கேலிக்குரியது என்று இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version