இலங்கை
பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை இணைவதை எதிர்க்கும் அண்டை நாடு
பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை இணைவதை எதிர்க்கும் அண்டை நாடு
பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை இணைவதை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கையில் பலம் பொருந்திய அண்டை நாடு ஒன்று ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் (Ministry of Foreign Affairs) தரப்பு இந்த விடயம் தொடர்பில் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.
குறித்த செய்தியில் மேலும்,
“பிரிக்ஸ் அமைப்பின் (BRICS) ஸ்தாபக உறுப்பினராகக் கூறப்படும் பலம் வாய்ந்த அண்டை நாடே செல்வாக்குமிக்க இந்த பொருளாதாரக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கை பிரிக்ஸ் அமைப்புடன் இணைவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த அண்டை நாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது.
மேலும், பிரிக்ஸ் அமைப்பில் இலங்கையின் நுழைவை முறியடிக்க தீவிரமாக பரப்புரை செய்து வருவதுடன், முன்னதாக ஆசியான் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் முயற்சிக்கும் இந்த நாடு எதிர்ப்பை காட்டியது.
அதேவேளை, இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைவதைத் தடுப்பதற்கு பல்வேறு நியாயங்களைப் பயன்படுத்தி குறித்த நாட்டினால் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரேசில் (Brazil), ரஸ்யா (Russia), இந்தியா (India), சீனா (China) மற்றும் தென்னாப்பிரிக்காவை (South Africa) உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் எத்தியோப்பியா, ஈரான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகியவற்றையும் உள்ளீர்த்து, கூட்டமைப்பின் உறுப்பினர்களை விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.