இலங்கை

ரணில் இல்லையேல் மீண்டும் வரிசை யுகம்

Published

on

ரணில் இல்லையேல் மீண்டும் வரிசை யுகம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால்(Ranil Wickremesinghe) மட்டுமே இந்த நாட்டை மீட்க முடியும். அவரின் பயணப் பாதையை மாற்ற முற்பட்டால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம்தான் உருவாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னதாக அரசமைப்பில் உள்ள ஏற்பாட்டுக்கமைய ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது போல் நிராகரிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்கள் அதனைச் செய்யலாம். 225 எம்.பிக்களை வேண்டுமானாலும் நிராகரிக்கலாம். ஆனால், ஜனாதிபதித் தேர்தலை எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தக்கூடாது.

ஏனெனில் வீழ்ந்த நாட்டை மீட்டெடுத்துவரும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். உலகில் நாடொன்று வங்குரோத்தடைந்தால் மீண்டுவர 8 முதல் 10 ஆண்டுகள்வரை செல்லும்.

எனினும், குறுகிய காலப்பகுதிக்குள் வங்குரோத்து அடைந்த எமது நாட்டை சீரான நிலைக்கு ஜனாதிபதி கொண்டுவந்துள்ளார். மே நடுப்பகுதியளவில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக மீண்ட பின்னர் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும்.

தற்போது எமக்கு வேறு வழியில்லை. ஒரே வழிதான் உள்ளது. அந்த வழியை மாற்றக்கூடாது. அவ்வாறு மாற்றினால் மீண்டும் வரிசை யுகம்தான் உருவாகும் என கூறியுள்ளார்.

Exit mobile version