இலங்கை

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தின் போது இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க படைகள்

Published

on

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தின் போது இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க படைகள்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் மேற்குலக நாடுகளில் பேசுபொருளாக மாறியிருந்தது.

எனினும் தற்போது ஈரானிய ஜனாதிபதியின் விஜயத்தின் போது அமெரிக்க படைகள் இலங்கையில் என்ன செய்கின்றார்கள் என ஈரான் சார்பு நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன.

16 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகைத் தருவது இதுவே முதல்முறையாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்க கடற்படை குழுவொன்றும் திருகோணமலைக்குச் சென்றிருப்பது சர்வதேச சமூகத்தில் கேள்வி நிலைகளை தோற்றுவித்துள்ளது.

சிரியாவில் இடம்பெற்ற ஈரான் தூதரக வளாக தாக்குதலின் எதிரொலிகள் வலுப்பெற்று ஈரான் – இஸ்ரேல் தாக்குதல்கள் சர்வதேசத்தின் மத்தியில் அச்ச நிலைகளை தோற்றுவித்திருந்தது.

இவ்வாறான பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் ஜனாதிபதி கடந்த ஏப்ரல் 21ம் திகதி பாகிஸ்தானுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டதோடு, நேற்றையதினம் மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடக நாட்டை வந்தடைந்திருந்தார்.

இலங்கை ஈரான் இருதரப்பு நிதியுதவியில் உமா ஓயா பல்நோக்கு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நீர் மின் நிலையத்தை ரைஸி திறந்து வைப்பதே அவரின் விஜயத்தின் முக்கிய திட்டமாக அமைந்திருந்தது.

தொடர்ந்து ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையே 5 புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த நிகழ்ச்சியின்போது, இந்திய பெருங்கடலில் இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என ரைஸி உறுதியளித்தார்.

அனைத்து ஆசிய நாடுகள், அண்டை நாடுகள், இறையாண்மை மற்றும் சுதந்திர நாடுகளுடன் இருதரப்பு உறவை விரிவுபடுத்த ஈரான் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கு விஜயம் தொடர்பில் அமெரிக்கா அதிருப்தி அடைந்திருப்பதாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

காரணம் தற்போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஆதரவென்பது இலங்கைக்கு இன்றி அமையாதது. இதனடிப்படையிலேயே ஈரான் ஜனாதிபதியின் திட்டமிடல்களுக்கு அமெரிக்காவின் எதிர்ப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

அத்தோடு ஈரான் – பாகிஸ்தான் உறவில் அதிருப்தி வெளியிட்ட அமெரிக்க, பொருளாதார தடை குறித்த எச்சரிக்கையை பாகிஸ்தான் பக்கம் திருப்பியிருந்தது.

இந்நிலையில், ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு நடுவே, கிழக்கில் அமெரிக்க கடற்படையின் சிறப்புப் பிரிவான FAST எனும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃப்ளீட் ஆண்டி டெரரிசம் செக்யூரிட்டி டீம் கப்பலானது நங்கூரமிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா கடற்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி நடவடிகைக்களுக்காக ஏப்ரல் 22 முதல் 26 வரை திருகோணமலையில் இருப்பார்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற மரைன் கார்ப்ஸின் சிறப்பு பிரிவே இதில் ஈடுபடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் தற்போது ஈரான் சார்பு நாடுகளில் இது தொடர்பான கேள்வி வலுப்பெற ஆரம்பித்துள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகளும் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version