இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏற்பட்ட நிலை: உயிர்த்தப்பிய மகிந்த மற்றும் மைத்திரி

Published

on

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏற்பட்ட நிலை: உயிர்த்தப்பிய மகிந்த மற்றும் மைத்திரி

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலைகள் மற்றும் போராட்டங்களின் போது பல அரசியல் தலைவர்களும் சில அமைப்புக்களின் தலைவர்களும் கொல்லப்பட்டதை நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) நினைவுப்படுத்தியுள்ளார்.

அத்துடன் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) மற்றும் சரத் பொன்சேகா (Sarath Fonseka) போன்றவர்கள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியதாகவும் விஜேகுமாரதுங்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்னை பிரபாகரன் போன்றவர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலியில் நேற்றைய தினம் (23.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் முக்கியமானவையே. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்திலேயே பலமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

அதனாலேயே ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு ஜனாதிபதி வலியுறுத்தி வருகின்றார். வீழ்ச்சியடைந்த நாட்டை, பதவியேற்ற சிறு காலத்துக்குள்ளேயே இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

அவரைப் பொறுத்தவரை வெளிவிவகார ஆலோசகர்கள் மற்றும் நிதியமைச்சுக்கான ஆலோசகர்கள் தேவையில்லை. பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகளுக்கும் ஆலோசகர்கள் தேவையில்லை.

ஏனெனில் இவை அனைத்தையும் தனியொரு நபராக செய்யக்கூடியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலைகள் மற்றும் போராட்டங்களின் போது பல அரசியல் தலைவர்களும் சில அமைப்புக்களின் தலைவர்களும் கொல்லப்பட்டனர்.

மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் சரத் பொன்சேகா போன்றவர்கள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர். எனினும் விஜேகுமாரதுங்க, வேலுப்பிள்னை பிரபாகரன் போன்றவர்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறான சம்பவங்களினால் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் விரிசல் ஏற்பட்டது. இந்த நாட்டில் பல காட்டிக்கொடுப்பு சம்பவங்களும் இடம்பெற்றன. இவை அனைத்தும் தவிர்க்கப்பட்டு அனைவரும் ஒன்றிணையும் பட்சத்திலேயே வளமான ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version