இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சிறீதரனின் நிலைப்பாடு

Published

on

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சிறீதரனின் நிலைப்பாடு

எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும். அந்த வகையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும். அந்த முயற்சிக்கு நான் கொள்கை அளவில் இணக்கம் தெரிவிக்கின்றேன் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S Shritharan) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எந்தவொரு விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லை.

ஆகவே, எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும்.

அந்த வகையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும். அந்த முயற்சிக்கு நான் கொள்கை அளவில் இணக்கம் தெரிவிக்கின்றேன்.

எனினும், இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் இந்த விடயம் சார்ந்து கலந்துரையாடி கட்சியாக தீர்மானம் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது.

ஆகவே, குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியாக கூடி ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என குறிப்பிட்டார்.

Exit mobile version