இலங்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்களுக்கு எச்சரிக்கை

Published

on

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டு (Tamil, Sinhala New Year) காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதாலேயே 36% வீதமான விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் 17% வீதமானோர் கண் பாதிப்புக்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை போக்குவரத்து அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சஜித் ரணதுங்க (Sajith Ranathunga), நேருக்கு நேராக முச்சக்கர வண்டிகள் மோதிக்கொள்வதால் இடம்பெறும் விபத்துக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கடுமையான விபத்துக்களில் சிக்கியவர்கள் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அதிகளவு அதிவேக வீதிகளுக்கு வெளியில் இடம்பெறும் விபத்துக்களிலேயே அதிகளவானோர் மரணிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதனால் நாளாந்தம் 10 பேர் வரையில் உயிரிழப்பதாகவும் விபத்துக்களை மட்டுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்த வேண்டியிருப்பதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன (Nayomi Jayewardene), பண்டிகைக் காலத்தில் பேருந்துகளினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தொடர்பில் 1955 என்ற அவசர இலக்கத்திற்கு 24 மணித்தியாலங்களும் அறிவிக்க முடியும் என்பதோடு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக பதிலளிக்க அதிகாரிகள் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version