இலங்கை

புதிய மின் சீர்திருத்த சட்டமூலத்தில் திருப்தியில்லை

Published

on

புதிய மின் சீர்திருத்த சட்டமூலத்தில் திருப்தியில்லை

அண்மையில் திருத்தப்பட்ட மின் மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லை என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் (CEBWU) குற்றம் சுமத்துவதாக பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.

செய்தி தளமொன்றின் நேர்காணலில் நேற்றைய தினம் (10.04.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது புதுப்பிக்கப்பட வேண்டிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) அறிவித்திருந்தார்.

இச் சட்டமூலத்தின் திருத்தப்பட்ட பதிப்பை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன் பின்னர் மேலதிக பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென் மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள சில மின்சார சபையின் கிளைகளுடன் அமைச்சகம் கலந்தாலோசித்ததில் பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது தொழிற்சங்கங்கள் கவலை வெளியிட்டுள்ளன என ரஞ்சன் ஜெயலால் கூறியுள்ளார்.

மேலும் அவர், “சட்டமூலம் திருத்தப்பட்டதாக அமைச்சகம் கூறினாலும், உத்தேச சட்டமூலத்தின் உள்ளடக்கம் மற்றும் நோக்கங்கள் மாற்றப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த மின்சார சபை தொழிற்சங்கங்கள் இந்த சட்டமூலம் குறித்து எந்த எதிர்ப்பையும் எழுப்பவில்லை. எனவே, முக்கிய எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இந்த சட்டமூலம் நிச்சயமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

முழு எரிசக்தி துறையையும் அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சர் விஜேசேகர எடுத்து வருகின்றார். மேலும், முன்மொழியப்பட்ட சட்டமூலமானது ‘இந்திய வம்சாவளியை’ கொண்ட சட்டமாகும்.

இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதன் அரசியலமைப்புத் தன்மைக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

அது மாத்திரமன்றி, புதிய சட்டமூலத்தினாலான விளைவுகள் தலைமுறைகளுக்கும் நீடிக்கும்” என குற்றம் சுமத்தியுள்ளார்.

Exit mobile version