இலங்கை

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக மூன்று மடங்கு நிவாரணம்

Published

on

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக மூன்று மடங்கு நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் மக்களின் வறுமைக்கு ஈடுகொடுக்கும் முகமாக சமுர்த்தி தொகையை விடவும் மூன்று மடங்கு அதிகமான நிவாரணத்தை வழங்கும் அஸ்வெசும திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்று போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்

சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், கடந்த கால நெருக்கடியின் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அந்த வறுமைக்கு ஈடுகொடுக்கும் முகமாகவே, சமுர்த்தி தொகையை விடவும் மூன்று மடங்கு அதிகமான நிவாரணந்தை வழங்கும் அஸ்வெசும சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த வேண்டியிருந்த நிலுவையில் இருந்த 361 பில்லியன் ரூபாவை செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதோடு, மூன்று மாதங்களுக்குள் புதிய ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளும் முழுமையாக வழங்கப்படும்.

இவ்வாறான நிதி ஒழுக்கத்தை பேணுவதாக சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜூன் மாதத்திற்குள், இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான இறுதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். அதன் பிறகு, தடைபட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version