இந்தியா

கச்சதீவு விவகாரம் : முன்னாள் உயர்ஸ்தானிகர்

Published

on

கச்சதீவு விவகாரம் : முன்னாள் உயர்ஸ்தானிகர்

இந்திய கடற்றொழிலாளர்கள், கச்சதீவில் (Kachchatheevu) இலங்கையின் (Sri Lanka) கடல் எல்லையைத் தாண்டினால் அது, இலங்கையின் இறையாண்மை மீறலாகவே பார்க்கப்படும் என இந்தியாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ (Austin Fernando) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து இந்திய அரச ஊடகமொன்றுடன் தொலைபேசியின் ஊடாக உரையாடிய போதே அவர் இந்த கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுபோன்ற கடல் அத்துமீறலை பாகிஸ்தான் முன்மொழிந்தால், அதனை இந்தியா பொறுத்துக்கொள்ளுமா?

பல தசாப்தங்கள் பழமையான கச்சத்தீவு பிரச்சினையை, வாக்காளர்களை கவர்வதற்காக, இந்திய பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, மீண்டும் தூண்டி விடுவதற்கு பாரதீய ஜனதா கட்சி முயற்சித்திருக்கலாம்.

ஆனால் இந்திய அரசாங்கம், இந்த விடயத்தில் இருந்து பின்வாங்குவது கடினம். பாரதீய ஜனதா கட்சி தேர்தலில் வெற்றி பெறும். எனவே இது தேர்தலுக்குப் பின்னர் அந்த கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

1980களின் பிற்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படை தொடர்பி்ல் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் (Ranasinghe Premadasa) அறிக்கைகளில் இந்திய அரசாங்கம் இலங்கை கடல்சார் சர்வதேச எல்லைக் கோட்டைத் தாண்டினால் அது இலங்கையின் இறையாண்மையை மீறுவதாகவே கருதப்படும் என பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.

இப்போது கச்சதீவு விடயம் தேர்தலுக்கான பேச்சு மட்டுமே என்று தெரிகிறது. ஆனால், ஒருமுறை இப்படிச் சொன்னால், தேர்தலுக்குப் பிறகு அதிலிருந்து வெளிவருவது இந்திய அரசாங்கத்துக்கு கடினம்.

இந்தநிலையில் கச்சதீவு பகுதியில் கடற்றொழில் செய்யும் உரிமை தங்களுக்கு வேண்டும் என்று ஜெய்சங்கர் கூறுகிறார். அதை திறம்பட செய்ய முடியுமா இல்லையா என்பது வேறு பிரச்சினை.

இதன் போது, எழும் பிரச்சனையை யார் கட்டுப்படுத்துவார்கள்? இந்தியக் கடலோரக் காவல்படை அதனை கட்டுப்படுத்தும் என்று தமக்கு கூறவேண்டாம் என்று இலங்கைப் பாதுகாப்புச் செயலாளராகவும் பணியாற்றிய பெர்னாண்டோ, தமது அனுபவத்தின் அடிப்படையில் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில், இலங்கை அரசாங்கம் அடிபணிந்தால், அது அரசாங்கத்திற்கு வடக்கு கடற்றொழிலாளர்களின் வாக்குகளில் நியாயமான பங்கைக் குறைக்கும்.

இலங்கையில் தற்போது நிலவும் இக்கட்டான சூழல் மற்றும் இங்குள்ள தேர்தல் சூழலின் காரணமாக கச்சதீவு விடயத்தை, இந்தியா எழுப்பியிருக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version