இலங்கை

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை திருத்தம்: நுகர்வோருக்கு அறிவுறுத்தல்

Published

on

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை திருத்தம்: நுகர்வோருக்கு அறிவுறுத்தல்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (Ceylon Petroleum Corporation) எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக சினோபெக் (SINOPEC) நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் உள்ள சினோபெக் எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது நுகர்வோர் இந்த விலை மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சினோபெக் அறிவித்துள்ள விலை திருத்தத்தின் படி ஒக்டேன் 95 பெட்ரோலுக்கு லீட்டருக்கு 7 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 440 ரூபாவாக உள்ளது.

அதேபோல், சூப்பர் டீசல் லீட்டருக்கு 72 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 386 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மண்ணெண்ணெய் விலையும் லீட்டருக்கு 12 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 245 ரூபாவாக உள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் லீட்டருக்கு முறையே 368 ரூபா மற்றும் 360 ரூபா என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நிர்ணயித்துள்ள விலைகளுக்கு ஏற்ப, மாற்றமில்லாமல் இருக்கும் என்று சினோபெக் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட சினோபெக் நிறுவனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்னதாக அறிவித்திருந்தார்.

கடந்த 15.08.2023 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியிருந்தார்.

அத்துடன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சினோபெக் நிறுவனம் 2023 செப்டெம்பர் மாதம் முதல் நிறுவனத்தின் வர்த்தக நாமத்தில் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதற்குள் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடனும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் மாத்திரமே இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட சினோபெக்கில் 3 ரூபா குறைவாக காணப்படுவதுடன், ஏனைய எரிபொருட்களின் விலைகள் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தி்ற்கு சமமான விலையாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version