இலங்கை
இலங்கைக்கான பயண ஆலோசனைகளை மதிப்பாய்வு செய்யும் ஐக்கிய இராச்சியம்
இலங்கைக்கான பயண ஆலோசனைகளை மதிப்பாய்வு செய்யும் ஐக்கிய இராச்சியம்
இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தொடர்ந்தும் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்வதாக ஐக்கிய இராச்சியத்தின் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய விவகார இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிக்கும் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை உட்பட அனைத்து நாடுகளுக்கும் இங்கிலாந்தின் பயண ஆலோசனைகளை தீர்மானிக்கும் போது தமது நாட்டு மக்களின் பாதுகாப்பு முக்கிய காரணியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பயண ஆலோசனையானது, வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி, பிரித்தானியா மக்கள் முடிவுகளை எடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போது, ஏற்படும் அபாயங்கள் பற்றிய சமீபத்திய மதிப்பீட்டை அது பிரதிபலிக்கிறது.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐக்கிய இராச்சியத்தின் சில முன்னணி சுற்றுலா வழங்குநர்கள், இலங்கை தொடர்பான, பயண ஆலோசனையை திருத்த வேண்டும் என்று 35 கையொப்பங்களுடன் ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.
அதில், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை மற்றும் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் நாட்டில் உருவான எரிபொருள் மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்றவை விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.