இலங்கை

பணத்தை அச்சிட முடியாது என அறிவித்த ரணில் : அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம்

Published

on

பணத்தை அச்சிட முடியாது என அறிவித்த ரணில் : அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம்

எத்தனை சிரமங்கள் இருந்தாலும் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஓரிரு சம்பவங்களால் இந்த நாடு வங்குரோத்தாகவில்லை. இந்த நிலை நீண்ட கால காரணங்களால் உருவாகியது.

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சட்ட மூலங்களில் தேசிய கொள்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஆசியாவிலேயே மிகவும் சக்திவாய்ந்த நிதிக் கட்டுப்பாட்டு சட்ட மூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளன.

பணப் பயன்பாட்டையும் சட்டக் கட்டமைப்பில் சேர்த்துள்ளோம். எனவே, திருடன், திருடன் என்று யாருக்கும் சொல்ல முடியாது.

அனைவருக்கும் சமமான சட்டத்தை அமுல்படுத்துவதே எமது நோக்கம் என்பதைக் கூற வேண்டும். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை கையாள்வது தொடர்பில் மேலும் சில விசேட சட்ட மூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை வங்குரோத்தானதை அடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இனி பணத்தை அச்சிட முடியாது என்று அறிவித்தார்.

ஆனால் விருப்பமின்றியேனும் நாட்டின் வரி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எத்தனை சிரமங்கள் இருந்தாலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மறக்கவில்லை. அஸ்வெசும பலன்கள் ரூ.15000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்பட்டது. இந்நாட்டில் இருபது இலட்சம் பேருக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கும் உறுமய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version