இலங்கை
குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு
குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு
குவைத்தில் தங்களுடைய வதிவிட விசாவை மீறி வேலைக்காக தங்கியிருக்கும் மற்றும் பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளார்.
இந்த பொது மன்னிப்பு காலம் கடந்த 03/17 முதல் அடுத்த 06/17 வரை நடைமுறையில் இருக்கும்.
உத்தியோகபூர்வ தகவல்களின்படி, தற்போது குவைத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 19,620 இலங்கையர்கள் இருப்பதாகவும், அவர்களில் சுமார் 5,000 இலங்கையர்கள் இலங்கைக்கு திரும்புவதற்காக தமது தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாகவும் இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.
இந்த பொதுமன்னிப்புக் காலத்திற்குள் வராதவர்கள் மீண்டும் இலங்கைக்கு வரவேண்டுமானால், அவர்கள் கைது செய்யப்பட்டு கைரேகைகள் பதிக்கப்பட்டு, 650,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் குவைத்துக்குள் நுழைய முடியாதவாறு நாடு கடத்தப்படுவார்கள்.
எவ்வாறாயினும், இந்த பொது மன்னிப்புக் காலத்தில் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்தால், இந்த அபராதங்களைச் செலுத்தவோ அல்லது பிற சட்ட நடவடிக்கைகளுக்கு இணங்கவோ தேவையில்லை.
மேலும், இந்த பொது மன்னிப்பு காலத்தில் இந்த அபராதத்தை செலுத்திய பிறகு, தேவைப்பட்டால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் தங்களுடைய குடியுரிமை விசாவை சட்டப்பூர்வமாக்கிய பிறகு குவைத்தில் தொடர்ந்து தங்கலாம்.
ஆனால், குவைத் நீதிமன்றத்திலோ அல்லது அந்நாட்டு காவல் நிலையத்திலோ வதிவிட விசா தொடர்பான முறைப்பாடுகள் தவிர்ந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பம் கிடைக்காது என இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பொது மன்னிப்புக் காலத்தில் தற்போது குவைத் மற்றும் இலங்கைக்கு இடையில் விமான சேவைகளை நடத்தி வரும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் அல் ஜசீரா ஏர்லைன்ஸ் ஆகிய சிறப்பு நிறுவனங்கள் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாகவும் குவைத்தில் உள்ள இலங்கை தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.