அரசியல்

தேர்தலில் எந்த தமிழ் கட்சிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்

Published

on

தேர்தலில் எந்த தமிழ் கட்சிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்

எதிர்வரும் தேர்தலில் மற்றவர்களை விலத்தி முன்னால் ஓடப் போகிற குதிரையாக தமிழரசுக் கட்சியே இருக்க போகிறது என கம்பவாரதி ஜெயராஜ் தனது உரலார் கேள்வி,உலக்கையார் பதில் என்ற தொகுப்பில் தெரிவித்துள்ளார்.

அந்த தொகுப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

உரலார் கேள்வி :- வரப்போகிற தேர்தலில் தமிழ்க்கட்சிகளில் எந்தக் கட்சிக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கப் போகிறது?

உலக்கையார் பதில் :- சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருப்பதால், ஊகத்தால் அன்றி உறுதிபட இக்கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். ஆனாலும் நீங்கள் கேட்டபடியால் என் ஊகத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

சென்ற தேர்தலின்போது கூட்டமைப்புக்குள் முன்னாள் முதலமைச்சர் ஏற்படுத்தியிருந்த குழப்பங்களால், அக் கட்சி தனக்கென வைத்திருந்த மக்கள் ஆதரவினை ஓரளவு இழந்து போயிற்று. அக் கட்சியால் இழக்கப்பட்ட மக்கள் ஆதரவினை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைச் சார்ந்த “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி” கட்சியும், முன்னாள் முதலமைச்சரால் புதிதாய் ஆரம்பிக்கப்பட்ட “தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி”க் கட்சியும் தமக்குள் பகிர்ந்து கொண்டு அப்போது சில வெற்றிகளைத் தேடிக்கொண்டன.

ஆனால் இன்றைய நிலையில், அவ்விரு கட்சிகளுக்கும் அப்போது இருந்த ஆதரவு வற்றிப் போய்விட்டதாகவே தோன்றுகிறது.

கஜேந்திரகுமாரின் “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி” தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது வெறுமனே கூக்குரல் இடுவதோடு ஓய்ந்து போகிறது. எந்தப் பிரச்சினைக்கும் நடைமுறைச் சாத்தியமான தீர்வினை அவர்கள் முன்வைப்பதே இல்லை.

குறித்த சில ஆதரவாளர்களை மட்டும் அழைத்துச்சென்று, பொலிஸாரையும், இராணுவத்தினரையும் எதிர்த்து அவர்கள் நடாத்தும் போராட்டங்கள், அவர்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே பயன்படுகின்றன. அவர்களின் அப் போராட்டங்களில் கூடும் குறைந்த கூட்டம், அவர்கள் வைத்திருக்கும் மிகக் குறைவான ஆதரவாளர்களின் கணக்கைப் பகிரங்கப்படுத்துகிறது.

அவர்கள் ‘துணைவலி’ பற்றிக் கவலைப்படாமல், தமது அறிக்கைகளால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பகை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் உலக சக்திகள் ஏதும் அவர்களின் வெற்றிக்குத் துணை செய்யப் போவதில்லை என்பது நிச்சயம்.

வடக்குக்கு வெளியே போராட்டம் நடத்தப்போன அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், சிங்களப் பெண்களிடம் அடிவாங்கி ஓடியமைக்கு இன்றுவரை எந்த எதிர்வினையும் ஆற்ற முடியாமல் நிற்பது அவர்களின் வலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அது தவிரவும் சென்ற தேர்தலில் இளைஞர் பட்டாளம் ஒன்றை இக் கட்சிக்காகச் சேர்த்துத் தந்த மணிவண்ணன் உடனான மனமுறிவும், இக் கட்சியின் பலத்தைப் பாதிக்கவே செய்திருக்கிறது.

இக் கட்சியினர் தமிழ் மக்களுடன் பேணும் உறவு நிலை மிகவும் பலவீனமானது. தமிழ் மக்களின் சங்கமங்களில் இக் கட்சியின் தலைவர்களைப் பெரும்பாலும் காண முடிவதில்லை. இவையெல்லாம் இக் கட்சியின் பலவீனங்கள்.

இக் கட்சியை வழி நடத்துகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நாடாளுமன்றத்தில், அழகான ஆங்கிலத்தில் ஆற்றுகிற வாதங்கள் மட்டும்தான் இப்போதைக்கு அவர்களது கட்சிக்கு இருக்கின்ற ஒரே பலம் என்று சொல்லலாம். அதனால் வரும் தேர்தலில், இக் கட்சி பெரும் சலசலப்பை ஏற்படுத்தப்போவதில்லை என்றே தோன்றுகிறது.

சித்தார்த்தனின் “தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்” செல்வம் அடைக்கலநாதனின் “தமிழீழ விடுதலை இயக்கம்”, சுரேஷ் பிரேமச்சந்திரனின் “ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி” என்பவை முன்பு கூட்டமைப்போடு கூடியிருந்ததால் பலம் பெற்ற கட்சிகள்.

இவர்களை உப்புக்கு உவமானமாகச் சொல்லலாம். உப்பு கறிகளில் சேர்ந்து சுவை தருமே தவிர, தனித்து அதனை உண்ண முடியாது. அப்படித்தான் இக் கட்சிகளும் இருக்கின்றன. இவர்கள் துணை செய்ய உதவுவார்களே தவிரத் தனித்து நிற்கப் பயன்படமாட்டார்கள்.

குறிப்பிட்ட சில ஊர்களில் குறிப்பிட்ட சில ஆதரவாளர்களை இவர்கள் தமக்காக்கி வைத்திருக்கிறார்கள். அவ்வளவே! கூட்டமைப்பில் இருந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, தமது பலம் காட்டப்போய் மன முறிவேற்பட்டு முன்னாள் முதலமைச்சர் எனும் ‘மண் குதிரையை’ நம்பி ஆற்றில் இறங்கப் போன இவர்கள், இன்று அலமந்து நிற்கிறார்கள். அதனால் இவர்களது கட்சிகளும் வரப்போகிற தேர்தலில் சென்றமுறை போலப் பேசப்படப் போவதில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் “ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி”க்கு அமைச்சுப் பதவியின் பக்கபலம் இருப்பது ஒரு ‘பிளஸ் பொயின்ட்’. அத்தோடு டக்ளஸ் என்கின்ற தனி மனிதனின் ஓய்வொழிச்சல் இல்லாத வீரியமான செயற்பாடு மற்றொரு ‘பிளஸ் பொயின்ட்’. ஆனால், இன்றுவரை அக் கட்சி, டக்ளஸ் என்கின்ற ஒருவரை மட்டும்தான் நம்பி இயங்கி வருகிறது.

‘தனிமரத் தோப்பாகவே’ இருந்து வருகிற அக் கட்சியால், ஓர் தேசிய இனத்தை முழுமையாய் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? என்ற கேள்வி பூதாகரமாய் முன்னிற்கவே செய்கிறது.

அதனால் வரப்போகிற தேர்தலிலும் அக் கட்சி, முன்புபோலவே வரையறுக்கப்பட்ட சில இடங்களில் மட்டும் தன் பலத்தைக் காட்டுவதோடு ஓய்ந்து போகும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அடுத்து வருவது, முன்னாள் முதலமைச்சரின் “தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி”. அக் கட்சி உயிரோடு இருக்கிறதா? இல்லையா? என்ற ஐயப்பாட்டை, அக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களே அறிக்கைகள் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சென்ற இடங்களிலெல்லாம் சீர்கேட்டை உருவாக்கியும், நம்பியவர்களையெல்லாம் மோசம் செய்தும், பின் வருபவர்களையெல்லாம் அவ்வப்போது கழற்றிவிட்டும், அக் கட்சியின் தலைவர் எவர்க்கும் அஞ்சாமல் நடந்து கொண்டிருக்கிறார்.

இவரை நம்பிப் பின்னால் நடக்கத் தொடங்கிய டாக்டர்கள், பத்திரிகையாளர்கள், மற்றைய கட்சிக்காரர்கள், தன் கட்சிக்காரர்கள் என பலரும் இன்று அரசியல் அநாதைகளாகி இருப்பது வெளிப்படை.

கூட்டமைப்பின் நிர்வாகக் கோளாறுகளால் சலிப்படைந்த மக்களின் மனநிலையைத் தனதாக்கியும், ஞானி போன்ற தன் தோற்றக் கவர்ச்சியைப் பயன்படுத்தியும், முன்பு வகித்த உயர் பதவியால் பெற்ற மதிப்பைக் கொண்டும், சென்றமுறை தந்திரமாகப் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த இவரது உண்மை முகத்தை, இப்போது மக்கள் நன்றாக இனங்கண்டுகொண்டு விட்டபடியால், இவரது அல்லது இவரது கட்சியினது பாதிப்பு வரும் தேர்தலில் சிறிதளவும் இராதென்றே நினைக்கிறேன்.

பேரினக் கட்சியினோடு உள்வரப்போகிற ஒரு சில ‘தனியர்’களின் நிலையும் மொத்தத் தமிழ் அரசியலைப் பெரியளவில் பாதிக்காது என்பது நிச்சயம்.

நிறைவாக, எஞ்சியிருப்பது “தமிழரசுக் கட்சி” ஒன்றே.

வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ்மக்களின் ஒருமித்த அங்கீகாரம், புலம்பெயர் தமிழர்களிடம் பெற்றிருக்கும் அங்கீகாரம், தமிழர் பிரச்சினையில் உலகநாடுகள் தரும், மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கில்லாத தனித்த அங்கீகாரம், அயல்நாடான இந்தியாவின் அங்கீகாரம், இனப்பிரச்சினைத் தீர்வில் சிங்கள ஆட்சியாளர்கள் இக்கட்சிக்குத் தரும் முக்கியத்துவம், நீண்டநாட்களாகத் தமிழனத்தை வழிநடத்திவரும் வரலாற்றுச் சிறப்பு, ஜனநாயகத்தைத் தொடர்ந்து பேணிவருவதால் பெற்ற மரியாதை எனப் பல தகுதிகளைத் தன்னகத்தே அடக்கி, தேர்தல் போட்டியில் மற்றவர்களை விலத்தி முன்னால் ஓடப் போகிற குதிரையாக இக் கட்சியே இருக்கப் போகிறது.

ஆனால், மற்றவர்களைப் பின்தள்ளி ஓடப்போகிற இக் குதிரைக்கு, எதிராளிகளால் இருக்கும் ஆபத்தைவிட அதனை வளர்ப்பவர்களால் வரப்போகும் ஆபத்தே அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

பதவி ஆசையால் ஒருவருக்கொருவர் கால்தடம் போட்டு, அக் கட்சியின் உறுப்பினர்கள் இயங்குவது கண்டு, அக் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் கண்ணீர் வடித்து நிற்கின்றனர்.

பிற்கால இளைஞர்கள் செய்த தியாகங்களோடு ஒப்பிடுகையில், ஒன்றுமே இல்லாத தங்களது தியாகப் பதாதைகளைத் தூக்கி பிடித்துக் கொண்டும், கட்சியின் முக்கிய பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டும், ‘இன்னும் நாங்கள்தான் இக் கட்சிக் குதிரையை ஓட்டுவோம்’ என்று விடாப்பிடியாக உட்கார்ந்திருக்கின்ற, இயங்க முடியாத கிழட்டு ‘ஜொக்கி’களைக் கழற்றிவிட்டு, புதிய ஆற்றல்மிக்க இளைய ‘ஜொக்கி’களைக் குதிரையில் ஏற்றுவதே இக் கட்சி உருப்படுவதற்குச் செய்யவேண்டிய முதற் காரியம்.

குதிரையில் ஏறப்போகும் இளைய ‘ஜொக்கி’களும் தமக்குள் தாம் சண்டை பிடித்துக் கொள்ளாமல், ஒன்றாக அக் குதிரையில் ஏறி ஓட்டப் பழகவேண்டும். அல்லது ஒருவரை ஓட்டவிட்டு, ஒட்டுபவர்க்கு மற்றவர் துணைசெய்து வெற்றியைத் தமதாக்க வழி செய்ய வேண்டும். இச் செயல் தவறுமானாலும், வெற்றி பெறவேண்டிய இக் குதிரை வீணாகத் தோற்கும் என்பதில் ஐயமில்லை.

அக் கட்சியைச் சார்ந்தவர்கள் மேற்சொன்ன உண்மைகளை உணர்ந்து, வெகு விரைவில் நிதானத்திற்கு வந்து செயற்பட ஆரம்பிக்க வேண்டும்.

கிடைத்தற்கரிய வாய்ப்பு இக் கட்சியை நோக்கி வருகிறது. அதனைச் சரியாகப் பயன்படுத்தாமல் விடுகிற அளவிற்கு இக் கட்சியினர் முட்டாள்களாக இருக்க மாட்டார்கள் எனத் தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.

Exit mobile version