இலங்கை

இலங்கையர்கள் படுகொலை விவகாரம்: கனடிய ஊடகங்களை பாராட்டிய ஹரீன்

Published

on

இலங்கையர்கள் படுகொலை விவகாரம்: கனடிய ஊடகங்களை பாராட்டிய ஹரீன்

கனடாவில் இயங்கி வரும் ஊடகங்கள் மிகவும் ஒழுக்கநெறியுடன் செயற்பட்டு வருவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக் குடும்பம் ஒன்று கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

கூரிய ஆயுதங்களின் மூலம் 19 வயதான இலங்கை இளைஞரின் தாக்குதலுக்கு இலக்காகி இவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற போது கனடிய ஊடகங்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை பிரச்சாரம் செய்து குடும்பங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற போது ஒரேயொரு குடும்ப புகைப்படம் மட்டுமே சில ஊடகங்கள் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் இவ்வாறான ஓர் சந்தர்ப்பம் இடம்பெற்றிருந்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அம்பலப்படுத்தி அவர்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஊடக ஒழுக்கநெறி மீறல்களை வரையறுக்கும் நோக்கில் அரசாங்கம் இணைய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகம் செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க பாலியல் குற்றச் செயல் சர்ச்சையில் சிக்கிய போதும் அந்நாட்டு ஊடகங்களில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண் பற்றிய புகைப்படங்களை வெளியிடவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version