இலங்கை

பிற்போடப்பட்டது இலங்கை – இந்திய ஒப்பந்தம்!

Published

on

பிற்போடப்பட்டது இலங்கை – இந்திய ஒப்பந்தம்!

இந்திய பொதுத் தேர்தல் நிறைவு பெற்றதன் பின்னர் இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதேவேளை வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களுக்காக நடைமுறைக்கு சாத்தியமான வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எட்கா ஒப்பந்தம் இந்த மாதம் கைச்சாத்திடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அது பிற்போடப்பட்டுள்ளது. இந்திய பொதுத்தேர்தல் நிறைவு பெற்றதன் பின்னர் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் போது எவ்விதமான முறையான வழிமுறைகளும் தற்போது பின்பற்றப்படுவதில்லை. ஆகவே எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

முதலாவது இலங்கைக்கு வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்த கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். 2016 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாட்டுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது அரசாங்கத்திடம் இதனை குறிப்பிட்டோம். ஆனால் அரசாங்கம் அதை கவனத்திற் கொள்ளவில்லை.

குறித்த ஒரு ஒப்பந்தத்தில் இலங்கைக்கு அனுகூலம் எது,பிரதிகூலம் எது என்பதை அடையாளப்படுத்த ஒரு வழிமுறை வேண்டும். அவ்வாறான வழிமுறைகள் எதுவும் இல்லாமல் வர்த்தக ஒப்பந்தங்களுக்குச் சென்றால் எதிர்மறையான தாக்கங்கள் மாத்திரமே ஏற்படும்.

இரண்டாவது வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு உரிய சட்டங்கள் நடைமுறையில் இல்லை. ஆகவே வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களுக்காக நடைமுறைக்கு சாத்தியமான வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

மூன்றாவது ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுதற்கு ஒருமாதத்துக்கு முன்னர் ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பகிரங்கப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் இருநாள் விவாதம் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் ஒப்பந்தத்தின் உண்மைத் தன்மை வெளிப்படும்.

1998 ஆம் ஆண்டு இந்தியாவுடன் முதலாவது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர், பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பயன் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்ட நான்கு நிபந்தனைகளையும் பின்பற்றாமல் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் அது இலங்கைக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். ஆகவே நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட அரசாங்கத்துக்கு உரிமையில்லை என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Exit mobile version