அரசியல்

தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியை எதிர்க்கின்றோம் : பசில்

Published

on

தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியை எதிர்க்கின்றோம் : பசில்

நாட்டின் முக்கியமான தேசியத் தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் எந்தவொரு முயற்சியையும் தாம் எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் சீரமைப்பு குறித்து ராஜபக்ச அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருந்தாலும், அரசாங்கம் உண்மையிலேயே அந்த கட்சியின் கீழ் செயற்படுகிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூர் ஊடகம் ஒன்றுடன் கலந்துரையாடலை நடத்திய அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமைச்சரவை அமைச்சர்கள் மட்டுமே தமது கட்சி அலுவலகத்திற்கு வருகை தருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த அமைச்சர்களில் முதன்மையாக இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் கம்பஹா மாவட்டத் தலைவர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது என்று பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், அவரது கட்சியே நாடாளுமன்ற தேர்தலின் மூலமும் ஆட்சியைப் பிடிக்கும்.

எனவே அதற்குப் பதிலாக, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக சுயாதீனமாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதி பதவியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Exit mobile version