அரசியல்

ரணில் விக்ரமசிக்கவிற்கு நிகரான எதிராளி யார்?

Published

on

ரணில் விக்ரமசிக்கவிற்கு நிகரான எதிராளி யார்?

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகி, பிரதமர் ஆகி, ஜனாதிபதியாகிய ரணில் விக்ரமசிங்க வரிசையுகத்தில் இருந்து இலங்கையை சாதாரண நிலைக்கு திருப்பியவர் என்பதை எதிர்வாதம் செய்வதற்கு எந்த இலங்கையரும் தயாரில்லை.

இக் கூற்றினை அரசியல் பேதங்களின் அடிப்படையில் யாரும் விமர்சிக்கலாம் முற்றிலும் செயற்பாட்டு ரீதியாகவோ தரவுகளின் அடிப்படையிலேயோ யாரும் எண்பிக்க முடியாது.

தேசிய பொருளாதார நெருக்கடிகளுக்கு தேசிய அரசியலைக் காரணம் காட்டி அதன் தொடர்செயற்பாடுகளால் கோட்டபாயவை ஆட்சியை விட்டு ஓடுமளவிற்கு களச் சூழலை மிகவும் திறமையாக பாவித்ததில் ரணில் விக்ரமசிங்கவின் பங்கு மகத்தானது.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றம் நுழைந்த ரணில் விக்ரமசிங்க நாட்டின் அப்போதைய நிதிநிலைதொடர்பில் அவதானத்தினை செலுத்தி சர்வகட்சி மாநாடு ஒன்றை கோரியிருந்தார்.அதற்கு அமைவாகவே சர்வகட்சி கூட்டமானது கூட்டப்படுகின்றது.

அக்கூட்டமே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட்ட அரசாங்கம் நிம்மதியாக அமர்ந்த கடைசிக் கூட்டமாக இருந்திருக்கின்றது.

பசில் ராஜபக்சவிடம் ரணில் விக்ரமசிங்க ஐ.எம்.எவ் இன் இடைக்கால அறிக்கை தொடர்பில் வினவும்போது அவ்வாறு ஒரு விடயம் இல்லை என முதலில் மறுத்து பின்னர் மிகவும் நகைப்புக்குரியவகையில் பசில் ராஜபக்ச பதிலளிக்கின்றார் அது ஒரு வரைபு மாத்திரமே அன்றி அது பெரிய விடயமல்ல எனத்தெரிவித்து உங்களுக்கு வேண்டும் என்றால் ஒரு பிரதி தரமுனைகின்றேன் என தெரிவிக்கின்றார்.

அப்போது நீங்கள் எனக்கு தரவேண்டாம் சர்வகட்சிக்கும் நாடாளுமன்றத்திற்கும் தெரியப்படுத்துங்கள் என ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். இதுவே கோட்டபாய ராஜபக்ச ஆட்சியிழப்பின் ஆரம்பப் புள்ளி. இதன் பின்னராக நடைபெற்ற ஒவ்வொரு விடயத்தினையும் பக்குவமாக கையாளும் திறன் ராஜபக்ச தரப்பிடம் இருந்திருக்கவில்லை.

இதற்கான காரணமாக பிராண்ட் ராஜபக்சவில் இருந்து வந்த ஒரேயொரு காரணம் மாத்திரமே அவர்களுக்கான அரசியல் தகுதியாக இருந்தது. பிராண்ட் ராஜபக்ச எப்படி உருவாகினார்? உண்மையில் தமிழ் தரப்புகளின் ஆயுதப் போராட்டத்தில் மிகவும் காத்திரமான முன்னேற்றத்தினையும் அடையாளத்தினையும் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மகத்தே வைத்திருந்ததுடன் பிரபஞ்ச அளவில் பிராண்ட் ஆக மாறியிருந்தார் பிரபாகரன்.

இந்த பிரபஞ்ச பிராண்ட் ஐ அழித்தார் என்ற ஒற்றைக் காரணத்தில் பிராண்ட் ஆகியதே ராஜபக்ச பிராண்ட். ராஜபக்ச பமிலி பிராண்ட் சிங்கள தேசத்து மக்களின் மனங்களில் இருந்த பிராண்ட் இடைவெளியானது இச் சூழ்நிலையில் இனவாத விதைப்புக்களுடன் ஒரு பெரிய எதிரியை வீழ்த்திய மனோபாவத்துடன் ராஜபக்ச பிராண்ட் உருவாகின்றது.

ராஜபக்ச பிராண்ட் என்பது சற்றே முன்னேறி ராஜபக்ச பமிலி பிராண்ட் ஆக முன்னேற ஆரம்பித்ததில் இருந்தே தம்மைத் தாமே தொலைந்தவர்களாக மாற்றவேண்டிய சூழ்நிலை உருவாகியது.

இலங்கையில் காணமல் ஆக்கப்பட்டோர் விபரத்தில் முன்னால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பெயரும் இடம்பெற்றுள்ளதா என ஆராயவேண்டிய நிலைவரைக்கும் முன்னேறியிருந்தது.

கஷ்டம் கஷ்டம் என்ற சொல்லை மக்கள் உச்சரிப்பதில் இருந்து உணரும் அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் பாதாளம் நோக்கியிருந்தது. பிராண்ட் ஆன வாழ்க்கை எல்லாம் பொருந்தாது என மக்கள் முடிவுசெய்யும் வகையில் பொருளாதார நிலை வளர்ச்சியை முன்னோக்கியதாக்கி தனக்குரிய தகுதிகாண் காலத்தினை தகுதியுடையதாக்கினார் ரணில் விக்ரமசிங்க என்றால் அது மிகையாகாது.

சிங்கள மக்கள் மத்தியில் ரணில் ஒரு நீண்ட நெடிய அரசியல் அனுபவம் உடைய ஒரு தலைவர், சர்வதேசங்களும் தலைசாய்க்கும் ஒரு மூத்த அரசியல்வாதி, சர்வ சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு ஜனாதிபதி போன்ற கருத்துருவாக்கங்கள் அண்மைய நாட்களில் மக்கள் மனங்களைப் பாதித்திருக்கின்றது.

குறிப்பாக ஒரு விடயத்தினை நினைவுபடுத்த வேண்டும் கோட்டபாய விரட்டியடிப்பு நிகழ்ச்சியின் தொடர்ச்சியில் எரியூட்டப்பட்ட அரச பிரமுகர்களின் இல்லங்களில் மிகவும் எளிமையானதும் பழமையானதும் ஆன வீடு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் உடையதே ஆகின்றது. மிகவும் குறைந்த பெறுமதி மதிக்கப்பட்ட கட்டடம் அவருடைய வீடாகவே இருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே பல சிங்கள மக்கள் தளங்கள் மற்றும் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் முன்னிற்க வேண்டும் என்ற ஆதரவுக் கருத்தினை வெளிப்படுத்திவருகின்றார்கள்.

குறிப்பாக இவ் விடயங்கள் தொடர்பில் தனி மனிதனாக அரசில் நுழைந்த ரணில் விக்ரமசிங்கவினை இன்றைய சூழ்நிலையில் ஆதரிக்கும் பெரமுன, சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களில் கணிசமானவர்களின் நிலைப்பாடு கட்சிகளின் கட்டமைப்பு நிலைப்பாடுகளை புறநீங்கி தத்தமது ஏகாந்த தீர்மானங்களாகவே காணப்படுகின்றன.

இவ் விடயம் இவர்கள் சார்ந்திருக்கும் ஆதரவாளர்களின் மனோநிலை மாற்றம் தொடர்பாக எடுத்தியம்புகின்றது. இன்றைய சிங்கள மக்கள் மத்தியில் ரணில் தொடர்பாக அறிவதற்கு இவ் அவதானமே போதுமானது.

எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் சித்தாந்த அரசியலில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் மட்டுமே ரணிலுக்கு எதிர்வேட்பாளர் ஆகின்றார், தவிர நவீன சிந்தாந்த அரசியல் விளக்கங்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வேட்பாளரை முன்னிறுத்தலாம்.

இவ்வாறு முன்னிறுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அதன் பின்விளைவுகள் நிச்சயமாக ஐக்கிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதாகவே அமையும். இவ்வாறானதொரு சூழ்நிலையே பெரமுன கட்சிக்கும் உள்ளது. அது தன்னை தக்கவைத்து தகவமைத்துக்கொள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களை முன்னிறுத்தாது.

நாடாளுமன்றத் தேர்தலை இலக்குவைக்கின்றது. அவ்வாறானதொரு சூழ்நிலையை உருவாக்க அல்லது முகாமை செய்ய ஐக்கிய மக்கள் சக்திக்கு சக்தியில்லை என்பது வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் நிரூபணமாகும்.

தேசிய தமிழ் பிரச்சினைகள் தொடர்பில் ரணில் நிலைப்பாடானது தமிழ் தேசிய பிரச்சினை அல்ல என்பதே ஆகும். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்றைய தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் சிங்கள ஆட்சியாளர்களை எதிர்ப்பது என்ற விடயம் மாத்திரமே இவ்விருவரதும் பொதுவான பண்பாகின்றதே அன்றி தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்றைய தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் எவ்விதத்திலும் ஒருமித்த பண்புடையவர்கள் அல்ல.

வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒருவேளை விடுதலைப்புலிகளது வழித்தடத்தில் தமிழ் தேசிய கட்சிகள் பயணிக்கின்றது என நம்பி வாக்களிக்கலாம், வெல்லவைக்கலாம், ஆனால் ரணில் விக்ரமசிங்க அதனை நம்புவதற்கு தயாராகவில்லை.

ஆறு சுற்று பேச்சுக்களில் விடுதலைப்புலிகளுடன் முன்னைடுத்த முன்னைய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் நல்லாட்சியிலும் சரி தற்போதும் சரி தமிழ் மக்களது பிரச்சினை என ஒரு தேசிய பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவ்வாறு ஏற்றுக்கொள்ளாத ஒரு பிரச்சினைக்கு தீர்வுதேடி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அலைவதுதான் தமிழ் தேசிய அரசியலின் அல்டிமேட் கோல் ஆகின்றது.

ரணில் விக்ரமசிங்க பிரண்ட் ரணிலாக சிங்கள மக்களது கட்சிகள் மற்றும் தளங்களது பெரும்பான்மையான ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர் ஆகின்றார். இவருக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற நுழைவிற்குரிய வாக்குகளை தனிலும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

சிறிது காலத்தில் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்று பிரதமராகி ஜனாதிபதியாகின்றார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக வாக்களித்து ஜனாதிபதியாக்கினார்கள்.

கோட்பாய ராஜபக்சவின் அரகளவில் கலந்துகொண்ட அரசியல் கட்சிக்காரர்கள் மீது தாக்குதல்கள் வீடெரிப்புக்கள் இடம்பெற்றது உச்சபட்சமாக அமரகீர்த்தி அத்துக்கொரள நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார்.

மாறாக ஜனாதிபதி தெரிவில் ரணிலுக்கு வாக்களித்த எந்தவொரு உறுப்பினரோ ஆதரவாளரோ மக்களால் தாக்கப்படவில்லை. இதனை ஒரு எடுமானமாக நோக்குகையில் ரணில் பிராண்ட் என்பதை மேவுவதற்கு எந்தவொரு நிகரான வெற்றிவேட்பாளரும் 2024ல் தோன்றப்போவதில்லை.

Exit mobile version