இலங்கை

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்:ரணிலுக்கு ஆதரவு

Published

on

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்:ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 40 இலட்சம் வாக்குகளை வைத்துக்கொண்டே பொது வேட்பாளராக களமிறங்குவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று(12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்துகொள்ள கலந்துரையாடி வருகின்றனர்.

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூன்றில் இரண்டு பேர் எம்முடன் இணைந்துகொள்வார்கள்.

அத்துடன் கடந்தகால தேர்தல்களை ஆராய்ந்து பார்த்தால், 2020 பொதுத தேர்தலில் வாக்களிக்காமல் இருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் தொகை 22இலட்சம் பேராகும்.

2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச 55இலட்சம் வாக்குகளை பெற்றார். அது நூற்றுக்கு 41 வீதமாகும். அதேநேரம் பொதுத தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 27 இலட்சம் வாக்குகளே கிடைத்தது. அது நூற்றுக்கு 23வீதமாகும். அதாவது 41 வீதத்தில் இருந்து 23வீதத்துக்கு குறைவடைந்தது.

அன்றைய தினம் 22இலட்சம் பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. கட்சி பிளவுபடுவதை விரும்பாதவர்களே வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு பொதுத் தேர்தலில் கிடைக்கப் பெற்ற இரண்டரை இலட்சம் வாக்குகளுடன் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் புதிய எழுச்சியின் மூலம் எமது கணிப்பின் பிரகாரம் சுமார் 35, 40 இலட்சம் பேர் எம்முடன் இணைந்துள்ளனர்.

அதனால் ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பாக ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க நாங்கள் பிரேரித்திருக்கிறோம்.

அவர் கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார். சுமார் 40 இலட்சம் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே ரணில் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் களமிறங்குகிறார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றலுடன் குளியாபிடியவில் இடம்பெற்ற மக்கள் பேரணி வெற்றியளித்துள்ளது.

இதன் மூலம் மௌனமாக இருந்துவந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மீண்டும் வழித்தெழுந்துள்ளனர்.

ஆதரவாளர்களின் மீள் எழுச்சி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என்ற கருத்து தற்போது நாடுபூராகவும் பரவி வருகிறது.” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version