இலங்கை

காலி – பிடிகல துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் உயிரிழப்பு

Published

on

காலி – பிடிகல துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் உயிரிழப்பு

காலி – பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் கடையொன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த நபர் இன்று (12.03.2024) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, உயிரிழந்த நபர், ஹொரங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.

எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர்களில் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அம்பலாங்கொடை மற்றும் எல்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

பிடிகல, குருவல பிரதேசத்தில் கடையொன்றுக்கு அருகில் நேற்று (11) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், T-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் எல்பிட்டிய வைத்தியசாலையிலும் மேலும் இருவர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தில் கடையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையத்திற்கு பிரவேசித்த ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version