இலங்கை

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ்

Published

on

வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்ய உத்தரவிட்ட பொலிஸ்

வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்யுமாறு நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஆலயத்தின் செயலாளர் தமிழ்செல்வன் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வெடுக்குநாறி ஆலயத்தில் பூஜைகளுக்காக சென்றபோது பூசகர் உள்ளிட்ட சிலரை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 3 பொலிஸார் மறித்து ”பூஜைகளுக்கு மின்சாரத்தினை பயன்படுத்த வேண்டாம்” என கட்டளையிட்டுள்ளனர்.

அதன்படி ஆலய பூஜை ஒழுங்குகளுக்கு சென்றபோது அவர்கள் பயணித்த தண்ணீர் கொள்கலன் வாகனமானது பழுதடைந்துள்ளது.

அதனை சரி செய்ய 15 நிமிடங்கள் சென்றுள்ளது. இதன்போது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த 3 பொலிஸாரில் இருவர் பூசகர் உள்ளிட்ட குழுவினரிடம் வருகைத்தந்து ”ஆலயத்திற்கு செல்லவேண்டாம். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வந்தவுடன் அவரின் அனுமதியோடு செல்லுங்கள்” என உத்தரவிட்டுள்ளனர்.

நான் உள்ளிட்ட எங்களது குழுவினர் உளவு இயந்திரம் ஊடாக ஆலயத்திற்கு முன்னதாக சென்றுவிட்டோம். இதன்போது பின்னால் வருகைதந்த பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட 5 பேரை அவ்விடத்திற்கு வந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களது அடையாள அட்டையை பிடுங்கி முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி அச்சுறுத்தியுள்ளார்.

மேலும் ஆலய பூசகரை இழுத்து சென்று வண்டியில் ஏற்றியுள்ளார். இதன்போது ஆலயத்தில் இருப்பவர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்யுமாறு ஏனைய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கூட எமது வழிபாட்டுரிமை தொடர்பில் நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரின் இந்த அடாவடித்தனமான செயற்பாடானது கண்டிக்கத்தக்கது. எமது வழிபாட்டுரிமையை பாதுகாக்க ஒழுங்கு செய்ததன்படி பூஜைகள் நடைபெறவேண்டும்.

மேலும் கைதுசெய்யப்பட்ட ஆலய பூசகர் உட்பட எமது நிர்வாகத்தினர் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி நாளையத்தினம் இடம்பெறும் பூஜைகளில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.” என்றார்

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த கைது தொடர்பான முழுமையான அறிக்கையை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த வேளையிலேயே அவர் இன்று (07.03.2024) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, விழாவுக்காக கொண்டு செல்லப்பட்ட தோரணங்கள், வாழைமரங்கள், தண்ணீர் பெளசர் போன்றன பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஒழுங்குபடுத்தல்களுக்கு சென்றவர்களின் தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், தொலைபேசிகள் போன்றனவும் பொலிஸாரால் பறிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version