இந்தியா
சாந்தனின் மர்ம மரணத்தின் பின்னரும் நடந்த இழுபறி
தற்போது இலங்கைத் தமிழர் மத்தியில் அதிகம் பேசப்படுவது சாந்தனின் மரணமும், அவர் பட்ட துயரங்களும் தான்.
தன்னுடைய இள வயதில் தாய் நாட்டை விட்டு பல எதிர்பார்ப்புக்களுடன் வெளியேறிய சாந்தன், முதுமை ஆரம்பிக்கும் தருணத்தில் வெறும் வித்துடலாக தாயகம் திரும்பினார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து பின்னர் விடுதலையாகி, நோயுடன் போராடி, இயற்கையை வெற்றிக்கொள்ள முடியாமல் மாண்டே போனார்.
முதலில் மரணத் தண்டனை, அடுத்து ஆயுள் தண்டனை, அடுத்து விடுதலை… ஆனால் இந்த மூன்று விடயங்களுக்கும் இடையில் இருந்த இடைவெளி அத்தனை இலகுவானதும் அல்ல.
எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சட்ட சிக்கல்கள், எதிர்ப்புக்கள் என அனைத்தையும் தாண்டி கிடைத்த விடுதலை பயனற்றதாகவே இருந்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உள்ளிட்ட ஏனையவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இதன்போது , பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு உள்ளான சாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்று உயிரிழந்தார். அவர் விடுதலையானது முதற்கொண்டு அவர் உயிரிழக்கும் இறுதி தருணம் மட்டும் சாந்தனை இலங்கைக்கு கொண்டு வர அவரது குடும்பத்தினர் பெரும்பாடு பட்டனர். ஆனாலும் கூட முயற்சிகள் பலனளித்தும் அது எட்டாக் கனியாகிப் போனது தான் துயரம்.
சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார் சாந்தன். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு தனது தாய் நாட்டுக்கு திரும்பி தனது தாயாரை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சாந்தன்.
இதற்கிடையே, சாந்தனை இலங்கை நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை அண்மையில் அனுப்பியது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மத்திய அரசு அனுமதியளித்தது.
அதிலும், பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி அந்த அனுமதி வழங்கப்பட்டும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி வரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டது.
அதன் பின்னரும், சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்ததுடன், அதன் விளைவாக ஓரிரு தினங்களில் சாந்தன் நாடு திரும்பலாம் என்ற நிலை காணப்பட்டது.
இங்குதான் ஒரு திருப்பு முனை, அத்தனை வருடங்கள் உறுதியாக சிறைவாசம் அனுபவித்த சாந்தன் தான் வீடு திரும்பும் இறுதித் தருணத்தில் காலத்துடன் போராடி தளர்ந்து போனார் போலும்.
இது இவ்வாறு இருக்க விடுதலையான சாந்தனை கிட்டத்தட்ட இரண்டு வருட காலங்களை அண்மிக்கும் இந்த சந்தர்ப்பம் வரை இலங்கைக்கு திருப்பி அனுப்பாமைக்கு பாரதத்தின் கோபம் தான் காரணம் என்று பலர் தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தியின் இழப்பை சமன் செய்ய சாந்தனைக் கொண்டு பாரதம் வஞ்சம் தீர்த்தது என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
காரணம் எதுவாயினும், இந்திய மத்திய மற்றும் தமிழக அரசு நினைத்திருந்தால் சாந்தன் இரண்டு வருடங்களுக்குள்ளாகவே நாடு திரும்பியிருக்க முடியும் என்பது மறுக்க முடியாத ஒன்று.
இரண்டு வருடங்கள் திருச்சி சிறப்பு முகாமிலும், வைத்தியசாலையிலும் என இதுவும் அவருக்கொரு சிறைத் தண்டனையாகவே அமைந்துப் போனது. சாந்தனை உயிருடன் இலங்கைக்கு அனுப்பக்கூடிய இயலுமை இருந்தும் அதனை செய்யாது போனது எத்தகைய கொடுமையான ஒன்று.
இதேவேளை, அங்கிருந்து இலங்கைக்கு சாந்தனின் உடலைக் கொண்டு வருவதிலும் பல்வேறு சிக்கல் நிலை இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இலங்கைக்கு சாந்தனின் உடல் கொண்டு வரப்பட்டதும் கூட மீண்டும் ஒருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நீதவான் வருகைத் தாமதம் என்று பல்வேறு காரணங்களால் மீண்டும் சாந்தனின் உடலைக் குடும்பத்தாரிடம் கையளிப்பதிலும் இழுபறி நிலை காணப்பட்டது.
அத்துடன், மரணச் சான்றிதழ் தொடர்பிலும் பல்வேறு சிக்கல்கள் தோன்றியதாக குறிப்பிடப்படுகின்றது. அதனையடுத்து சாந்தனின் உடலைத் தாங்கிய ஊர்தி அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படும்போதும் பொலிஸாரின் இடையூறு என இறந்த பின்பும் சாந்தனின் வாழ்க்கை போராட்டத்தோடேயே முடிந்தது.