இலங்கை

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வுப்பணி வழக்கு ஒத்திவைப்பு

Published

on

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வுப்பணி வழக்கு ஒத்திவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வருடம் ஜீன் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இன்று (04.03.2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் ஏப்ரல் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வீ.எஸ். நிறஞ்சன், கணேஸ்வரன், தனஞ்சயன், ருஜிக்கா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில் வழக்கின் அகழ்வு பணியினை திட்டமிட்டபடி நடாத்த நிதி கிடைக்கபெறவில்லை.என தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும், முதல் கட்ட அகழ்வானது கடந்த வருடம் (06.09.2023) ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீட்டர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டிருந்தது.

அதனையடுத்து குறித்த அகழ்வுப்பணியின் மூன்றாவது கட்டம் இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

Exit mobile version