இலங்கை

30 ஆண்டுகளில் சிறையில் சாந்தனை சந்திக்க சென்ற ஒரேயொரு நபர்!

Published

on

30 ஆண்டுகளில் சிறையில் சாந்தனை சந்திக்க சென்ற ஒரேயொரு நபர்!

30 ஆண்டுகளுக்கு மேல் செய்யாத குற்றத்திற்கு சிறையில் வாடிய சாந்தனை பார்க்க ஒருவர் தான் சென்றதாக திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”நான் சாந்தனை பார்க்க பலமுறை சென்றுள்ளேன். 30 ஆண்டுகாலத்திற்கு மேல் சிறையில் இருந்த அவரை பார்க்க ஒரேயொரு பார்வையாளர் தான் வருகை தந்தார். அவர் சாந்தன் கைது செய்யப்படும் போது பிறந்துகூட இருக்காத அவரது சகோதரியின் மகன்.

சாந்தனின் சகோதரியின் மகன் வெளிநாடு செல்லும் போது,கேரளா ஊடாக வேலூருக்கு சென்று சாந்தனை சந்தித்துள்ளார்.இதன்போது சாந்தன் என்னை பற்றி கூறியுள்ளார்.

அந்த வாலிபன் திருவானந்தபுரத்திற்கு சென்று அங்கிருந்து தொலைப்பேசி மூலம் என்னை அழைத்து உரையாடினார்.

இதன்போது ஐயா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்,என்னால் உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எனது மாமா சாந்தன் உங்களை பற்றி நிறைய கூறினார். எனது மாமா யாரென்றே தெரியாமல் அவருக்காக நிறைய பேசியுள்ளீர்கள் ரொம்ப நன்றி என கூறினார்.

இப்படி 30 ஆண்டுகளில் சாந்தனை பார்க்க சென்ற ஒரேயொரு பார்வையாளர் இவர் தான். இவ்வாறு எந்த பாவமும் செய்யாமல் சபிக்கப்பட்ட ஒரு மனிதாக வாழ்ந்து தற்போது இறந்து போன சாந்தனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என பிராத்திப்பதை தான் இந்த கையாலாகாத எங்களால் செய்ய முடியும்.

மேலும் சிறப்பு முகாம் என்பது சிறையைவிட மோசமானது.அங்கு மனிதர்களுக்கு நடக்க கூட அனுமதியில்லை. திருச்சி சிறப்பு முகாமில் நடக்கும் கொடுமைகளுக்கு அளவே இல்லை.

உலகிலே அஹிம்சை வழியில் சுதந்திரம் பெற்றது நம் இந்திய நாட்டில் சக மனிதர்களை உயிராக கூட மதிக்காமல் கேவலமாக நடத்தப்படும் இடம் சிறப்பு முகாம். இதை நினைத்து தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும்.

விடுதலையான பின்னரும் அவர் வெளிநாட்டவர் என்பதற்காக சிறப்பு முகாம் எனும் கொடுஞ்சிறையில் அடைத்தனர்.

சாந்தனின் உயிர் பிரிந்த பின்னராவது அந்த சிந்தனை மாறட்டும்,அரசின் கொள்கைகள் மாறட்டும், யாராக இருந்தாலும் சக மனிதனை மதிக்கின்ற அளவில் சட்டங்கள் திருத்தப்பட்ட வேண்டும்.

மாநில அரசின் கீழ் தான் சிறப்பு முகாம் உள்ளது. எனவே அவர்கள் நினைத்தால் இந்த நிலைமையை மாற்ற முடியும்.

மத்திய அரசோ மாநில அரசோ இந்த கொள்கைகளை மாற்றுவது ஒன்றுதான் சாந்தனின் மரணத்திற்கு கொடுக்கக்கூடிய விலையாக இருக்க முடியும்.”என கூறியுள்ளார்.

Exit mobile version