இலங்கை

இலங்கையில் மீண்டும் சஹ்ரான் – குண்டுகள் வெடிக்கும் அபாயம்

Published

on

இலங்கையில் மீண்டும் சஹ்ரான் – குண்டுகள் வெடிக்கும் அபாயம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்துள்ள நிலையில், அரசியல் பரபரப்பு அற்ற காலப்பகுதியாக இரண்டு வருடங்கள் கடந்துள்ளன.

இந்தக் காலப்பகுதியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதை விட நாட்டு மக்களின் உயிரை காப்பாற்றுவது ஆட்சியாளர்களின் போராட்டமாக மாறியிருந்தது.

இந்நிலையில் மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்ஷர்களின் தயார்படுத்தப்பட்ட அரசியல் கருவியான ரணில் விக்ரமசிங்க மூலம் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை சற்று தப்பியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த வருடத்தில் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஜனாதிபதித் தேர்தலும் வருட இறுதியில் பொதுத் தேர்தலை நடத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திறைமறைவில் அரசியல் பேரம் பேசுதல்கள், கட்சிகளை உடைக்கும் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மெனமாக இருந்த இனவாத அரசியல்வாதிகள் மீண்டும் துயிலெழ ஆரம்பித்துள்ளதாக அண்மைக்கால சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.

வட பகுதியில் நில ஆக்கிரப்பு என்ற ரீதியில் தமிழர்களை சீண்டுவதுடன், கிழக்கில் பயங்கரவாதி சஹ்ரான் குழு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதான தோற்றப்பாடுகள் ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னணியிலேயே காத்தான்குடியில் நேற்று முன்தினம் 30 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் ஏப்ரல் 21 இரத்த கறைபடித்த வரலாற்று துன்பியல் நாளாகும். அடிப்படைவாத சிந்தனை கொண்ட பயங்கரவாதி சஹ்ரான் குழுவினால் தேவாலங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்கள் மேற்கொண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 230இற்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

ஏப்ரல் மாதம் என்பது அச்சம் நிறைந்த மாதமாக மக்கள் மத்தியில் பதிந்துள்ள நிலையில், சஹ்ரான் குழு மீண்டும் ஒழுங்கமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 30 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் சஹ்ரானுடன் தொடர்புடைய நான்கு பேர் இருந்தமையும் பொலிஸாரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் கடுமையான உயர் அரசியல் அழுத்தம் காரணமாக குறித்த 30 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் அதன் பின்னாலுள்ள அரசியல் குறித்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தனதாக்கும் நோக்கில் இந்த இனவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தற்போதைய ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் மூலம் சஹ்ரான் பயங்கரவாத கும்பல் ஒழுங்கமைக்கப்பட்டதாக, சர்வதேச ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையில் ஈஸ்டர் நாள் நெருக்கும் நிலையில் மீண்டும் சஹ்ரான் வருகை குறித்து எச்சரிக்கப்பட்டுளள்து. இதன் காரணமாக மற்றுமொரு குண்டுவெடிப்புகள் ஏற்படலாம் என அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சமகாலத்தில் சிங்களவர்கள் மத்தியில் தோல்வி கண்டவர்களாக ராஜபக்ஷ ரெஜிமென்ட் மாறியுள்ளது.

இவ்வாறான தாக்குதல்கள் மூலம் மீண்டும் இனவாத சிந்தனைகளை மக்கள் மத்தியில் செலுத்தி வெற்றியை ருசிக்கும் ரகசிய திட்டங்கள் வகுக்கப்பட்டுவிடுமோ என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் முகாமைத்துவம் மற்றும் வளங்கள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சட் வர்மா, ஈஸ்டர் தாக்குதல் குறித்து கரிசனையை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணை குறித்து அவர் விளக்கம் கோரியிருந்தார்.

குறித்த பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க தூதுவருக்கு நெருக்கமான ஒருவர் உயிரிழந்ததாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version