இலங்கை

பிரச்சினையின் பின்னணியில் சுமந்திரன்: அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி

Published

on

பிரச்சினையின் பின்னணியில் சுமந்திரன்: அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி

பிரச்சினையின் பின்னணியில் இருந்து சுமந்திரன் செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழியாய்ப் போகப்போகிறது என பேச்சாளரான கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

தனது தளத்தின் உரையாடல் பகுதியொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும்,

1. உரலார் கேள்வி :- தமிழரசுக் கட்சியின் பதவி தேர்வுகளை ஆட்சேபித்து நீதிமன்றில் வழக்குத் தொடுத்தவர்கள் சுமந்திரனதும், சாணக்கியனதும் ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் சுமந்திரனோ தான் கட்சிக்காக நீதிமன்றில் வழக்காடுவேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். அங்கு என்ன நடக்கிறதென்று உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

உலக்கையார் பதில் :- இடியப்ப சிக்கல் தான். இடியப் போகிற வீட்டில் முதலில் அங்காங்கு வெடிப்புகள் தோன்றும். தமிழரசுக் கட்சியிலும் அதுதான் நடக்கிறது. வரவர அங்கு வெடிப்புகள் பெரிதாகிக் கொண்டே போகின்றன. இப்படியே போனால் ‘வீடு’ விழப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.

சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” என்கிறார்கள். அதுபற்றிய உண்மை ஏதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, சுமந்திரன் அப்படிச் செய்கிறார் என்றால் அவர் பெரிய தவறு செய்கிறார் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

பகையை வெளிப்படையாய்க் கையாளாமல் தந்திரமாய்க் கையாள்பவர்களை மக்கள் மதிக்க மாட்டார்கள். ஒரு அரசியல் தலைவருக்கு புத்திசாலித்தனம் அவசியம் தான்!. ஆனால் தந்திரம் மிக்க அதிபுத்திசாலித்தனம் மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்ச்சியைத் தான் தோற்றுவிக்கும்.

முன்பு தமிழ்நாட்டின் முதலமைச்சராய் இருந்த மூதறிஞர் ராஜாஜியைப்பற்றி சிலர், “ராஜாஜிக்கு உடம்பெல்லாம் மூளை. மூளையெல்லாம் சிந்தனை. சிந்தனையெல்லாம் வஞ்சனை” என்று கிண்டலாய்ச் சொல்வார்கள். அவரது அந்த அதிபுத்திசாலித்தனமும் பின்னாளில் மக்களால் ரசிக்கப்படாமல் போயிற்று.

நம் நாட்டு மூத்த தமிழ்த் தலைவர்களான தந்தை செல்வா, ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகிய இருவரிலும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் செல்வாவை விட அதி புத்திசாலியாய் இருந்தார். ஆனால் அந்தப் புத்திசாலிதனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ஜீ.ஜீ. அவர்கள் தேர்தல் பரப்புரைக்காகச் செல்லும் போது, ஒரு வீட்டினுள் புகுந்து தனக்கான ஆதரவைக் கேட்பாராம். அத்தோடு அந்த வீட்டுக்காரரிடம் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் பற்றிய விபரங்கள் முழுவதையும் கேட்டறிந்து கொள்வாராம். பின்னர் அடுத்த வீட்டிற்குள் நுழையும் போதே, தான் அவர்களுக்கு நெருக்கமானவர் என நினைக்கச் செய்ய, அவர்களை உரிமையாய் பெயர் சொல்லி அழைத்து கொண்டே உள் நுழைவாராம்.

அது மட்டுமல்லாமல் அவர்களது பிள்ளைகளின் படிப்பு, தொழில் முதலியவை பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரிப்பாராம். அந்த வீட்டுக்காரர்கள், ஐயா! எங்களைப் பற்றியெல்லாம் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறாரே என மயங்கிப் போவார்களாம். சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அந்த அதி புத்திசாலித்தனம் நம் மக்களாலும் பெரியளவில் விரும்பப்படவில்லை.

மென்மையாகவும், எளிமையாகவும், இயல்பாகவும் இருந்த தந்தை செல்வாவை தான் மக்களுக்கு அதிகம் பிடித்தது. இவையெல்லாம் வஞ்சனையாய் செயற்படும் அதி புத்திசாலிகளை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதற்கான முன் உதாரணங்கள்.

பிரச்சினைகள் வரும்போது தந்திரங்கள் செய்யாமல், நேர்மையாக அவற்றை கையாள்வதுதான் மக்கள் மனதை வெல்வதற்கான சுலபமான வழி என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்ன பிரச்சினையில் சுமந்திரன் பின்னணியில் இருந்து செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழியாய்ப் போகப்போகிறது.

2. உரலார் கேள்வி :- இந்தியாவை மெல்ல மெல்ல இந்து நாடாக ஆக்க முயல்வது சரிதானா?

உலக்கையார் பதில் :- அதில் தவறென்ன இருக்கிறது? இந்தியாவைப் புதிதாக யாரும் இந்து நாடாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. அது ஏற்கனவே இந்துநாடாகத் தான் இருக்கிறது.

இந்தியா இந்து சமயத்தின் தளமாக இருக்கும் ஒரு நாடு என்பதை எவர் மறுக்க முடியும்? வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே அங்கிருந்த இந்து மத அடையாளங்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி, கிழக்கு மேற்குகளிலும் சரி அங்கு எல்லா இடங்களிலும் வரலாற்றுத் தொன்மைமிக்க இந்து மதக் கோவில்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

அடியார்கள், ஆழ்வார்கள் எனத் தமிழ் நாட்டில் இந்துமதத்தை வளர்த்த பெரியவர்களைப் போன்ற பலர் இந்தியா முழுவதிலும் விரவி இருந்திருக்கிறார்கள். அங்குள்ள புனித நதிகள், மலைகள் எல்லாம் கூட இந்து மத வரலாற்றில் பதிவாகி இருக்கின்றன. அங்குள்ள விலங்குகள், பறவைகள் மட்டுமன்றி மரங்களும், கற்களும் கூட இந்து சமய வரலாற்றோடு தொடர்புள்ளவையாய்ப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், தர்மசாஸ்திரம் என இந்து மதத்தின் அடிப்படை நூல்கள் எல்லாம் அங்குதான் தோன்றி வளர்ந்து நிலைத்திருக்கின்றன. பண்டைய காலந்தொட்டு அங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் இந்துசமய வழிபாட்டு முறையையும், ஆசாரங்களையும், சீலத்தையும்தான் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.

இவையெல்லாம் இன்று நேற்றுப் பதிவான விடயங்கள் இல்லை. தொன்றுதொட்டு வரும் விடயங்கள். அப்படியிருக்க இந்தியாவை இந்து நாடு எனச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

மத்திய கிழக்கு நாடுகள் தம்மை இஸ்லாமிய நாடுகள் எனப் பகிரங்கமாக அறிவிக்கின்றன. மேற்கு நாடுகள் தம்மைக் கிறிஸ்தவ நாடுகளாகத் துணிந்து வெளிப்படுத்துகின்றன. நம் நாடு தன்னைப் பௌத்த நாடு எனப் பகிரங்கப் படுத்தியிருக்கிறது. மேற் சொன்ன நாடுகளில் பல தம் நாட்டில் மற்றைய சமயங்களின் வழிபாட்டிற்கே தடை விதித்திருக்கின்றன. இவற்றை யாரும் பிழை சொல்வதில்லை. இந்தியாவை இந்து நாடு என்று சொன்னால் மட்டும் ஏனோ சிலர் குற்றம் சாட்டப் பாய்ந்து வருகிறார்கள்.

சிறுபான்மையினருக்கு உரிமையும், மதிப்பும் கொடுக்கத் தான் வேண்டும். அதற்காக பெரும்பான்மையினரின் உரிமையை மறுப்பதென்பது ஏற்க முடியாததொன்று என்றே கருதுகிறேன். சல்லடையார் சலிப்பு – கள்ளமில்லாத வெளிப்படையான உறுதியான பதில். வாரிதியாரின் துணிவு பாரட்டத்தக்கது.

3. உரலார் கேள்வி :- இந்த நூற்றாண்டின் ஆச்சரியப்படத்தக்க புதுமையாக எது இருக்கப் போகிறது?

உலக்கையார் பதில் :- ‘ஏலியன்ஸ்’ என்று சொல்லப்படுகின்ற வெளிக்கிரக வாசிகளின் வருகை தான் அத்தகைய புதுமையாக இருக்குமென நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நூற்றாண்டின் ‘ஐன்ஸ்ரீன்’ என்று சொல்லப்பட்ட மறைந்த விஞ்ஞானி ‘ஸ்டீபன் ஹக்’ இது பற்றி ஏற்கனவே சொல்லி விட்டுப் போய் விட்டார். ‘ஏலியன்ஸ்களாலும், செயற்கை அறிவூட்டலினாலும் பூமிக்குப் பேராபத்து நிகழ இருக்கிறது என்று அவர் சொன்ன கூற்று உண்மையென்றே நான் கருதுகிறேன். அவர் சொன்ன இரண்டில் ஒன்று மிக விரைவில் நடக்கப் போவதாய் எனது உள் மனம் சொல்கிறது.

தாயின் கையிலிருந்து விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞனின் நெகிழ்ச்சியான தகவல்
தாயின் கையிலிருந்து விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞனின் நெகிழ்ச்சியான தகவல்
ஆய்வாளர்கள் ஏற்கனவே ஏலியன்ஸ்கள் பூமிக்கு வரத் தொடங்கிவிட்டார்கள் என்கிறார்கள். அடிக்கடி பலநாடுகளிலும் பறக்கும் தட்டுக்கள் இனங்காணப்பட்டுள்ளன. அமெரிக்க விமானப்படை, கடற்படை ஊழியர்கள் கூட அதனை உறுதி செய்திருக்கிறார்கள்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், 1993 அல்லது 1994 என்று நினைக்கிறேன் யாழில் போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலம் அது. அக்காலத்தில் ஒருநாள் இரவு, நாம் ஓர் ஆலயத்தில் பட்டிமண்டபம் நடத்திக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட நடுச் சாமநேரம். திடீரென பட்டிமண்டபத்தைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் எல்லோரும் வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்று அறிய நானும் அண்ணாந்து பார்த்தேன். அப்போது வானத்தில் ஐந்து ஒளிர் பொருட்கள் கிடையாக ஒன்றன் பின் ஒன்றாகப் பறந்து போனதைக் கண்டு வியந்து போனேன்.

எரிகற்களாக இருந்தால் அவை செங்குத்தாகத் தான் பயணித்திருக்கும். நாம் கண்ட ஒளிப் பொருள்களின் கிடைக்கோட்டுப் பயணமும், அவற்றின் பயணவேகத்தில் இருந்த நிதானமும் அவற்றைப் பறக்கும் தட்டுகளாய்த்; தெளிவாய் இனங்காட்டின.

இதையெல்லாம் நீங்கள் நம்பவா போகிறீர்கள்? முக்கியமான ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன். கடல் பயணங்கள் செம்மையாவதற்கு முன்பு, கடல் தாண்டி இன்னொரு நிலப் பரப்பு இருப்பதையும், அங்கு மக்கள் வாழ்வதையும் யாரும் நம்பியிருக்கவில்லை. பின்னர் துணிந்த சிலர் கடல் பயணம் செய்து பிற கண்டங்களைக் கண்டு பிடித்தார்கள்.

அதன் பின்பு அவர்கள் படைபலத்தோடு அங்கு சென்று அங்குள்ளவர்களை அழித்து அல்லது அடக்கி அந்தப் பிரதேசத்தைத் தமக்காக்கிக் கொண்டார்கள். இது நாம் அறிய நடந்த வரலாறு.

அது போலத்தான் ஆகாய வழியாகச் சென்று மக்கள் வாழும் இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இன்று முயன்று வருகிறார்கள். இக் காரியத்தை நாம் மட்டுமல்ல வேற்றுக் கிரகவாசிகளும் செய்வார்கள் என்பது திண்ணம். அவர்கள் நம்மை விட அறிவாளிகளாகவும், பலசாலிகளாகவும் இருக்கும் பட்சத்தில் எமது பூமியை அழித்தோ, அடிமையாக்கியோ கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதுபற்றித்தான் இன்றைய வல்லரசுகள் பயப்படுகின்றன.

அப்போதாவது நம் மக்கள் மத்தியில் இருக்கும் இன, மத, ஜாதிச் சண்டைகள் முடிகிறதா என்று பார்ப்போம்.

4. உரலார் கேள்வி :- ரம்பாவின் கணவர் யாழ்ப்பாணத்தின் கல்விநிலையை உயர்த்திக் காட்டப் போகிறாராமே?

உலக்கையார் பதில் :- யாழ்ப்பாணத்தை அதன் இயல்புப்படி வாழவிட்டால் அது தானாக உயர்ந்து விடும் என்று நினைக்கிறேன். அதற்கு யாரும் இந்தளவு ஆட்டம் போடத் தேவையில்லை.

Exit mobile version