இலங்கை
போரில் இராணுவ வெற்றியே இலக்கு! இனவாத தேரர்களின் செயல்
போரில் இராணுவ வெற்றியே இலக்கு! இனவாத தேரர்களின் செயல்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவுக்கு கொண்டு வர ஒரு சில பௌத்த தேரர்கள் முயற்சித்திருந்ததாக தேசிய சமாதான பேரவையின் உறுப்பினரான பேராசிரியர். பல்லேகல ரத்னசார தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும், சில இனவாத தேரர்கள் இராணுவ வெற்றியை மாத்திரம் கருத்தில் கொண்டு இந்த போரின் போது செயல்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய சமாதான பேரவையால் இன்று கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நல்லிணத்துக்காக சமயங்கள் எனும் தொனிப்பொருளின் கீழான சர்வமத மாநாட்டில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரத்தின் போது, நாம் தமிழ் மக்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம்.
ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்களை கொல்ல நடவடிக்கை எடுத்திருந்தார்கள். கிழக்கு மாகாணத்தில் இருந்த வீடுகள் மற்றும் கல்வி கற்றவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவரும் அழிக்கப்பட்டார்கள்.
நாம் அப்போது கொழும்பில் உள்ள எமது விகாரைகளில் தமிழ் மக்களை மறைத்து வைத்திருந்தோம். அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி பாதுகாத்தோம்.
அன்று முதல் நாம் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்காக செயல்பட்டோம். வடக்கிலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேறிய போது புத்தளத்தில் அவர்கள் தங்க நாம் உதவினோம்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பௌத்த பிக்குகளை பேச்சுவார்த்தைகளுக்காக அழைத்தார். இதற்கேற்ப தேரர்கள் குழுவொன்று அவருடன் ஐந்து நாள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது.
பேச்சுவார்த்தைகளின் மூலம் வடக்கில் உள்ள பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும் என சிலர் கோரினாலும் 90 வீதமானோர் போரில் வெற்றியடைவதை பற்றியே பேசினார்கள்.
நாம் எமது இராணுவத்தினரை எதிர்க்கவில்லை. எனினும், போர் வெற்றி தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் சகோதரர்கள் இருவருக்கிடையிலான போரை போன்றது.
உக்ரைன்-ரஷ்யா யுத்தமும் சகோதரர்கள் இருவர்களுக்கிடையிலான போர். இந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற போர் நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த தேசிய சமாதான பேரவை அமைக்கப்பட்டது.
நாம் பல கூட்டங்களை நடத்தி, மக்கள் மத்தியில் காணப்பட்ட பிரிவினைகளை நீக்க நடவடிக்கை எடுத்தோம். இதனை தொடர்ந்து இலங்கையில் இடம்பெறவிருந்த இனவாத செயற்பாடுகளை நாம் தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டோம்“ என தெரிவித்தார்.