இலங்கை

இஸ்ரேலிய – உக்ரைனிய பயணிகளால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஆபத்து

Published

on

இஸ்ரேலிய – உக்ரைனிய பயணிகளால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஆபத்து

இஸ்ரேல், உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் நடவடிக்கைகளால் இலங்கை சுற்றுலாத்துறையில் கடும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று ஆங்கிலப் பத்திரிகையொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்னிலங்கையில் ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், தற்போது இஸ்ரேலிய, உக்ரைன் சுற்றுலாப்பயணிகளும் இலங்கையில் பாரியளவான சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களின் இந்த நடவடிக்கை காரணமாக உள்ளுர் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை உள்நாட்டு சுற்றுலாத்துறையினர் மத்தியில் இது குறித்த கரிசனைகள் அதிகரித்துள்ளன.

தென்னிலங்கை கடற்கரையோரம் முழுவதும் இஸ்ரேல் மற்றும் உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தலைப்பட்டுள்ளனர்.

அவர்கள் உணவுவிடுதிகள், ஹோட்டல்கள், சிறிய கடைகள் போன்றவற்றை நடத்துகின்றனர். இலங்கையில் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்யும் அளவிற்கு உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரித்துக் கொண்டுள்ளதாக உள்ளுர் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், அவர்கள் எந்தவொரு வர்த்தக நடவடிக்கைக்கும் முறையான அனுமதியைப் பெற்றுக் கொள்ளவில்லை. உடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் உள்ளுர் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் மோதும் நிலையேற்படும் என உள்ளுர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உள்ளுர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வர்த்தக செயற்பாடுகளில் சுற்றுலாப்பயணிகள் ஈடுபடுவதால் இந்த நிலைமையேற்படலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தென்னிலங்கையின் கடற்கரையோரங்கள் மற்றும் அண்மித்த நிலப்பரப்புகளில் இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வர்த்தக நடவடிக்கைகளிற்காக நிலங்களை கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் 99 வருட குத்தகைக்கு நிலங்களை கொள்வனவு செய்யத் தலைப்பட்டுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நிலங்களைக் கொள்வனவு செய்வதால் காணிகளுக்கான பெறுமதி விலை அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றுமில்லாதாவாறு அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ள உள்நாட்டு சுற்றுலாத்துறையினர், நாட்டின் சில பகுதிகளில் இது பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சுற்றுலாப்பயணிகள் நீண்டகாலம் நாட்டில் தங்கியிருப்பதால் உருவாகும் பாதிப்புகள் குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ள சுற்றுலாத்துறையினர், இவர்கள் உரிய பதிவுகள் இன்றி வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Exit mobile version