இலங்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
விமானங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் தாமதமாகி வருவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 7 விமானங்களை வாங்குவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பெறுவதற்கு நிதிப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று (27) கூறியுள்ளார்.
மேலும், நேற்றைய தினம் 7 விமானங்களில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஆனால் இரத்து செய்யப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
26 ஆம் திகதி மூன்று விமானங்கள் இரத்து செய்யப்படுவதாக பயணிகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 27 விமானங்கள் தேவைப்படும் பட்சத்தில், தற்போது 20 விமானங்கள் மட்டுமே உள்ளதாக விமான நிலைய சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில், கோவிட் சூழ்நிலையால் விமானங்களின் விலை குறைக்கப்பட்ட போதிலும், 11 விமானங்களை வாங்க முயற்சித்த போதிலும், பல்வேறு அதிகாரிகளின் விமர்சனங்களினால் விமானங்களை வாங்க முடியாத நிலையேற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பாவனையில் உள்ள விமானங்களும் கடன் தவணையின் கீழ் எடுக்கப்படுவதாகவும், அண்மைக்காலமாக விமானங்களை கொள்வனவு செய்ய முயற்சித்த போதிலும், நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக சில நிறுவனங்கள் இலங்கைக்கு விமானங்களை வழங்க தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.