இலங்கை

யாழில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பல்கலை மாணவன் தொடர்பாக தகவல்

Published

on

யாழில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பல்கலை மாணவன் தொடர்பாக தகவல்

யாழ்ப்பாணம், நீர்வேலியில் விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், வீடொன்றில் புகுந்து வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பியபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நேற்று (21.02.2024) அதிகாலை நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

மாணவன் உயிரிழந்த விவகாரம் மர்மமாக இருந்த நிலையில், மானிப்பாயை சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து, விபத்தில் சிக்கியவர் என்பது தெரியவந்தது.

இதேவேளை, வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்டியில் உள்ள வீடொன்றில் தாக்குதல் முயற்சி நடந்தது.

இது குறித்து பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது, குறித்த வீட்டிற்குள் நுழைந்து துடுப்பு மட்டையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி, வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த வானுக்கு தீ வைத்து விட்டு திரும்பி வரும் போதே பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனும் காயமடைந்தவரும் இணைந்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு விட்டு திரும்பி வரும் போது நீர்வேலியில் விபத்தில் சிக்கினர்.

அத்துடன், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றையவர், மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்து விட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

ஒரு தலைக்காதல் விவகாரத்தினால் இந்த வன்முறை தாக்குதல் நடத்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர் உட்பட இருவரிடம் அச்சுவேலி பொலிஸார் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version