அரசியல்

தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள் நாட்டை எப்படி மீளக் கட்டியெழுப்புவார்கள்

Published

on

தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்களால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற பிக்குகள் ஆலோசனை பேரவையின் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஏனைய மதங்களுக்கும் பொருத்தமான இடம் வழங்கப்பட வேண்டும் என அரசமைப்பில் கூறப்பட்டுள்ள போதிலும், மிஹிந்தலை புனித பூமியில் அமைந்துள்ள மிஹிந்தலை ரஜ மகா விகாரையின் மின்சாரம் கூட துண்டிக்கப்பட்டுள்ளது.

பௌத்த பிக்குகள் மேற்கொள்ளும் சமய சேவைகள் உட்பட ஏனைய சேவைகளையும் சூட்சமமாக நிறுத்த அரச கட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.

அந்த அரச கட்டமைப்பு மதப் பணிகளை ஒவ்வொன்றாக நிறுத்தி வருகின்றது. தலதா மாளிகை மீது குண்டு வைத்தவர்களால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது.

இந்த வன்முறைகள் சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டு நல்லாட்சி உருவாக்கப்பட வேண்டும். குடும்ப வாதத்தை இல்லாதொழித்து நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்.

பிரிவினைவாத பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர், அந்த மரியாதை, கௌரவம் முப்படைகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால், அந்த மரியாதையையும் கௌரவத்தையும் ஒரு சில குடும்பங்கள் எடுத்துக் கொண்டன.

அவ்வாறு எடுத்துக் கொண்டு, நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து, நாட்டில் பொருளாதாரப் பயங்கரவாதத்தைச் செயற்படுத்தி நாட்டையே அழித்தார்கள்.

இதன் காரணமாக 90 பில்லியன் டொலர் மதிப்பிலான கடனில் நாடு மூழ்கியுள்ளது. இதன் காரணமாக ஒருவர் தலா 12 இலட்சம் ரூபா கடனில் இருக்கின்றார்கள்.

இந்த வருட தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பொருளாதாரப் பயங்கரவாதிகளை விரட்டியடித்து நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய உண்மையான அரசாங்கத்தை உருவாக்க முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version