இலங்கை

ரூபாவின் வீழ்ச்சியால் மக்களுக்கு பெரும் சுமை : சதம் கூட வருமானம் இல்லாத இலங்கை

Published

on

ரூபாவின் வீழ்ச்சியால் மக்களுக்கு பெரும் சுமை : சதம் கூட வருமானம் இல்லாத இலங்கை

கடந்த காலங்களில் அரசாங்கத்தை நடத்துவதற்கு ஒரு சதம் கூட வருமானம் இருக்கவில்லை. வரி குறைக்கப்பட்டதால் அரசாங்க வருமானம் குன்றியது. அத்துடன், இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்தது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒன்றரை வருடங்களுக்கு முன்னரான இந்நாட்டின் நிலைமையை நாம் மறந்துவிட முடியாது. அப்போது, ​​எரிவாயு வரிசைகளிலும், எரிபொருள் வரிசைகளிலும் மக்கள் நேரத்தை செலவிட வேண்டியிருந்தது.

மருந்துகள் கிடைக்கவில்லை, வாழ்க்கைச் சூழல் மிகக் கடினமானதாக மாறியிருந்தது. அந்த நேரத்தில் நாடு முழுமையாக வங்குரோத்து நிலையில் காணப்பட்டது. அரசாங்கத்தை நடத்துவதற்கு ஒரு சதம் கூட வருமானம் இருக்கவில்லை. எரிபொருள், எரிவாயு இறக்குமதிக்கும் பணம் இருக்கவில்லை.

அதனால் மக்கள் வீதியிலிறங்கி போராடிய போதிலும் நாளடைவில் அவை சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அரச சொத்துகளுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்துதாக மாறியிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற ஓரிரு வாரங்களின் பின்னர் நாட்டில் சட்டம் ஒழுங்கு மீண்டும் நிலைநாட்டப்பட்டது.

நிதி நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டதுடன், எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த தருணத்தில் உரம் கிடைத்திருக்காவிட்டால் விவசாயத்துறை சரிவடைந்திருக்கும்.

இரண்டு முக்கிய காரணிகள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. முதலாவதாக உரக் கொள்கையால் விவசாயத் துறை வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. இரண்டாவதாக வரி குறைக்கப்பட்டதால் அரசாங்க வருமானம் குன்றியது. தேர்தல் குறித்த நோக்கத்தில் மாத்திரமே எடுக்கப்பட்ட முடிவுகளே இந்த நிலைக்கு வழிவகுத்திருந்தாலும் பிற்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து கிடைத்த உதவியால் அவற்றுக்குத் தீர்வைக் காண முடிந்தது.

பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்த வேலைத்திட்டத்திற்கு செல்ல ஜனாதிபதி தீர்மானித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அழுத்தங்களைக் குறைத்து அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. அதன்படி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வரிக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது.

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்தது. இதன் மூலம் வரியை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஆனால், அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டை எந்த வகையிலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால் இந்த கஷ்டங்களை இரண்டு மூன்று வருடங்கள் தாங்கினால் இயல்பு நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version