இலங்கை

பதவி மோகத்தில் தமிழரசுக் கட்சியைச் சிதைக்க சதி

Published

on

பதவி மோகத்தில் தமிழரசுக் கட்சியைச் சிதைக்க சதி

நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சிதைக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர், அவர்களின் சதித் திட்டம் வெற்றியளிக்க நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பதவி ஆசையில் அவர்கள் இந்தச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இது நன்றாகப் புரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்த பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும் யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நேற்று இடைக்காலத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தனிடம் தமிழ் ஊடகம் ஒன்று வினவியபோது, நீதிமன்றங்களின் இடைக்காலத் தடை உத்தரவுகள் தொடர்பில் தான் இப்போது கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியதுடன் மேற்படி விடயங்களையும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவுகளை பொதுச் சபை அங்கீகரிக்காதவிடத்து அல்லது அந்தத் தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து, தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடத்துங்கள் என்றும், அன்றைய தினமே மாநாட்டையும் நடத்தி முடியுங்கள் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை தன்னைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் (இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர்) சம்பந்தன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version