இலங்கை

கள்ளத்தனமாக நாட்டிற்குள் வரும் பொருட்களால் பாதிப்பு : சாணக்கியன்

Published

on

கள்ளத்தனமாக நாட்டிற்குள் வரும் பொருட்களால் பாதிப்பு : சாணக்கியன்

நாட்டிற்குள் கள்ளத்தனமாக நிலக்கடலையை இறக்குமதி செய்வதுதான் ஜனாதிபதி கூறிய பசுமைப் பொருளாதாரமா? என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு – கரடியனாறு மாவடிச்சேனை கிராமத்தின் நிலக்கடலை செய்கையாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் மட்டக்களப்பு – கரடியனாறு மாவடிச்சேனை கிராமத்தின் நிலக்கடலை செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேட்டறிந்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் உள்ள உள்ளூர் விவசாயிகளுக்கு நிர்ணய விலையை தீர்மானிக்க முடியாத நிலையில் தான் அரசாங்கம் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் விவசாயிகள் நிலக்கடலை செய்கையாளர்களுக்கு நிர்ணய விலை ஒன்று இல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அன்மையில் ஜனாதிபதி நாடாளுமன்றில் பசுமைப் பொருளாதாரம் தொடர்பில் கருத்து தெரிவித்தார். அதனூடாக நாட்டை கட்டியெழுப்புவேன் என்றெல்லாம் பேசினார். பசுமை பொருளாதார என்பது இதுபோன்ற சுய தொழில் செய்பவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவது. இங்கு மக்கள் காணிகளுக்கு ஒப்பம் இல்லாமல் காணிகள் அற்ற மக்களாக உள்ளனர்.

தமது சொந்த மாவட்டங்களில் நிலக்கடலை செய்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கூட சரியான நிர்ணய விலையை கூட இந்த அரசாங்கம் வழங்க மறுத்துள்ளது.

நெல் உற்பத்தி மற்றும் மேட்டு நில பயிற்செய்கை செய்பவர்களுக்கு சரியான விலை இல்லை, எவருக்குமே ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்க முடியாத ஜனாதிபதியாக இவர் உள்ளார்.

ஜனாதிபதியுடன் சேர்ந்து செயற்படும் மாவட்ட பிரதிநிதிகளும் அதே நிலைமையில் தான் உள்ளனர். நான் இந்த நிலக்கடலை பிரச்சினையை தீர்ப்பதாக இருந்தால் கொழும்பில் உள்ள அமைச்சர் ஒருவரிடம் தான் பேச வேண்டும். விவசாய அமைச்சர் கொழும்பில் உள்ளார்.

காணி அமைச்சர் கொழும்பில் உள்ளார், எங்களது கையில் அதிகாரம் இருந்தால் நாம் கொழும்புக்கு செல்ல வேண்டியதில்லை.

நேற்று பார்த்தேன் ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். அதற்கு முதல் இந்தியாவில் இருந்தனர்.

அதற்கு முதல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தனர். அவர்கள் மக்களின் வரிப்பணத்தை எடுத்துக் கொண்டு சுற்றுலா பயணிகள் போல் நாடு நாடாக சுற்றுகின்றனர்.

அடிமட்டத்தில் உள்ள கிராம மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய செயற்பாடுகள் அவர்களிடம் இல்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வாறான மக்களின் பிரச்சினையை தான் பசுமை பொருளாதாரம் என்பதன் ஊடாக அபிவிருத்தி செய்து இருக்க வேண்டும்.

இந்த நாட்டில் இறக்குமதி இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் நாட்டிற்குள்ளே கள்ளத்தனமாக நிலக்கடலை வருகின்றது என்றால், நீதி எங்கு உள்ளது சட்டத்துறை என்ன செய்கின்றது.

நாம் ஒரு மாவீரர் தின நிகழ்விற்கு சென்றால் கூட மோப்பநாய் போல் வருகை தந்து கைது செய்யும் பொலிஸாரும், புலனாய்வு துறையினரால் ஏன் இவற்றை பிடிக்க முடியவில்லை.

இவ்வளவு பெரிய தீவினுள் வெளிநாட்டில் இருந்து. நிலக்கடலை வருகின்றதை பிடிக்கத் தெரியாவிடின் , பிறகு இந்த புலனாய்வுத் துறையும் இராணுவமும் என்ன செய்கின்றது என்ற கேள்வி உள்ளது. என்றார்.

Exit mobile version