இலங்கை

இராணுவத் தளபதிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு

Published

on

இராணுவத் தளபதிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு

2006 ஆம் ஆண்டு தமிழ் இளைஞனொருவர் காணாமல் போனமைக்கு ஓமந்தை கட்டளைத் தளபதி பொறுப்பாளி எனவும், வன்னி பிராந்திய தளபதி உயர் அதிகாரி என்ற முறையில் பொறுப்பாளி எனவும், இலங்கை இராணுவத் தளபதி, இலங்கை இராணுவ கட்டமைப்பின் தளபதி என்ற வகையில் பொறுப்பாளி எனவும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமான ஓமந்தை சோதனைச் சாவடியை வந்தடைந்த கந்தசாமி இளமாறன் என்ற இளைஞன் ஓமந்தை சோதனைச் சாவடியில் இருந்து காணாமல் போயுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஓமந்தை இராணுவ கட்டளைத் தளபதி, வன்னி கட்டளைத் தளபதி, கொழும்பு இராணுவ கட்டளைத் தளபதி ஆகிய மூவருக்கும் எதிராக ஆட்கொணர்வு மனு, சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேலால் தாக்கல் செய்யப்பட்டு 18 ஆண்டுகளின் பின்னர் நேற்று(07) வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஓமந்தை சோதனைச் சாவடி பதிவு புத்தகத்தில், குறிக்கப்பட்ட இளைஞன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வந்தமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்த இளைஞனை தாங்கள் கைது செய்யவில்லை எனவும், தடுத்து வைக்கவில்லை எனவும், இராணுவ தரப்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

குறிக்கப்பட்ட இளைஞன் கடைசியாக காணப்பட்ட இடம், ஓமந்தை சோதனை சாவடி. அதன் பின் அவர் காணமல் போயுள்ளார் என மனுதாரர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் ஓமந்தை கட்டளைத் தளபதி குறித்த இளைஞன் காணமல் போனமைக்கு பொறுப்பாளி எனவும், வன்னி பிராந்திய தளபதி உயர் அதிகாரி என்ற முறையில் பொறுப்பாளி எனவும், இலங்கை இராணுவத் தளபதி, இலங்கை இராணுவ கட்டமைப்பின் தளபதி என்ற வகையில் பொறுப்பாளி எனவும், தீர்ப்பளித்து 03.06.2024 இற்கு முன் இளைஞனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு முன்னிலைப்படுத்த தவறின் 03.12.2024 முதல் 3 தளபதிகளும் ஒன்றாக இளைஞனின் தாயாருக்கு 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு கட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இளைஞன் காணாமல் போனது தொடர்பாக தகுந்த சட்ட நடவடிக்கைக்கு சட்டமா அதிபருக்கு நீதிமன்றத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version