இலங்கை

யாழில் மிகவும் ஆபத்தான நபர் கொழும்பில் பதுங்கியிருந்த நிலையில் சுற்றிவளைப்பு

Published

on

யாழில் மிகவும் ஆபத்தான நபர் கொழும்பில் பதுங்கியிருந்த நிலையில் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணத்தில் பல பாரிய குற்றங்களைச் செய்த ஆவா எனும் கப்பம் கொள்ளைக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் நபர், கல்கிசை – யசோரபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் வாடகை அடிப்படையில் வீடு வழங்கினால், அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த நபர்கள் என்ன செய்கிறார்கள் மற்றும் எங்கிருந்து வந்தவர்கள் என்பது குறித்தும் ஆராய்ந்து பார்க்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்த நபர்கள் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான விடயங்கள் இருப்பின் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

25 வயதான பிரபாகரன் கௌசிகன் நேற்று காலை யசோரபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் தங்கியிருந்த போது ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பிரபா என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார், மேலும் ஆவா கும்பலில் அவர் கோயின்சி தம்பா என்று அழைக்கப்படுகிறார்.

சந்தேகநபருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திலும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும் தலா இரண்டு திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன், கைது செய்யப்படும் போது ஒரு கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், குற்றக் கும்பலின் இலச்சினைகள் அடங்கிய துண்டுப் பிரசுரம் மற்றும் அதே இலச்சினையுடன் கூடிய 100 ரூபா நாணயத்தாள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொலை, கொலை முயற்சி, ஆபத்தான கும்பலுடன் இயங்குதல், வாகனங்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய வழக்குகள் தெலிப்பளை, சுன்னாகம், மானிப்பாய் , யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களில் அவருக்கு எதிராக பதிவாகியிருந்தன.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர் வெளிநாடுகளுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யசோரபுர வீட்டின் ஒரு பகுதியை மாதாந்தம் இருபத்தைந்தாயிரம் ரூபாவுக்கு பெற்றுக் கொண்டுள்ளார்.

வெளியில் சென்று குற்ற செயல்களில் ஈடுபட்டதன் பின்னர் மீண்டும் இந்த இடத்திற்கு வந்து தலைமறைவாக இருக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Exit mobile version