இலங்கை

நுவரெலியாவில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

Published

on

நுவரெலியாவில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

கடந்த மூன்று நாட்களுக்கு முன் சந்தையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் விலை மீண்டும் திடீரென உயர்வடைந்துள்ளது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய தினம் (24.01.2024) புதன்கிழமை வெளியிடப்பட்ட விலை பட்டியலிலேயே குறித்த விலை நிலவரம் வெளியாகி உள்ளது.

குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த காலங்களில் 2000/= ரூபாவுக்கு அதிகமாக உச்ச விலையை கொண்டிருந்த கரட்டின் விலை கடந்த மூன்று நாட்களுக்கு முன் கிலோவுக்கு 900/= ரூபாயாக விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட்டு அதை நுகர்வோருக்கு 950/= ரூபாய் என விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீழ்ச்சியடைந்து இருந்த கரட்டின் விலை இன்றைய தினம் (24.01.2024) மீண்டும் உச்சம் பெற்றுள்ளது.

இதன்போது கரட் ஒரு கிலோகிராம் விவசாயிகளிடம் 1200/= ரூபாய் முதல் 1250/= ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்பட்டு அதை 1300/= விற்பனை செய்யப்படவுள்ளதாக நுவரெலியா மத்திய பொருளாதார நிலைய காரியாலயம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கோவா 470/= ரூபாய், லீக்ஸ் 480/=ரூபாய், ராபு 170/= ரூபாய், உருளைகிழங்கு 320/= என மொத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரக்கறிகளின் விலை அதிகமாக உள்ளதால், அன்றாட தேவைக்காக குறைந்த அளவே மரக்கறிகளை வாங்குவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version