இலங்கை

கோட்டாபயவின் அறைக்குள் சிக்கிய பெருந்தொகைப் பணம் தொடர்பில் தீர்மானம்

Published

on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் உத்தியோகபூர்வ அறைக்குள்ளிருந்து சிக்கிய பெருந்தொகைப் பணம் குறித்து வழக்குத் தொடர்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட 2022ம் ஆண்டின் ஜூலை மாதம் 09ம் திகதி , அவரது உத்தியோகபூர்வ அறைக்குள் இருந்து பெருந்தொகைப் பணம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்டது.

ஒருகோடி எழுபத்தி எட்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா அவ்வாறு கைப்பற்றப்பட்டதாக தெரிவித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். பின்னர் நீதிமன்றத் தலையீட்டின் காரணமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பணம் எங்கிருந்து வந்தது? சட்டவிரோதமான வழிகளில் பெற்ற பணமா என்பது குறித்து விசாரணைகள் நடத்தவோ, வழக்குத் தொடரவோ உத்தேசம் இல்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்றையதினம் கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனது தீர்மானத்தை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

பணம் கைப்பற்றப்பட்ட விடயத்தில் சந்தேகத்திற்கிடமான தடயங்கள் எதுவும் இல்லை என்றும் வெறும் சம்பவத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர முடியாது என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதே போன்று குறித்த பணத்தை நீதிமன்றத்திடம் ஒப்படைக்காமல் குறுக்கு வழியில் கோட்டாபயவிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான முறைப்பாட்டையும் போலி முறைப்பாடு என நீதிமன்றத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அவர் மிரட்டியதற்கான சாட்சியங்கள் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version