இலங்கை

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி: பிரேத பரிசோதனையில் தகவல்

Published

on

டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உள் இரத்தக்கசிவே கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

டெங்கு நோயினால் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவியொருவர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.

கொழும்பு அழகு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும்,ஹொரணை உயன பிரதேசத்தில் வசித்து வந்த ஹாஷினி பாக்யா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 5 ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 11ஆம் திகதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் சுயநினைவின்றி இருந்ததாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹாஷினி பாக்யா நேற்றைய தினம் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உள் ரத்தக் கசிவு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 86,232 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு கொழும்பில் 3,992 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,892 ஆக உள்ளது. அவர்களில் 1,956 பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version