இலங்கை
புத்தருக்காக உயிர் தியாகம் செய்ய கோரும் பௌத்த போதகர்
கௌதம புத்தருக்காக உயிரைத் தியாகம் செய்யுமாறு அடியார்களை கோரும் மற்றுமொரு பௌத்த மத போதகர் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பௌத்த மதத்தை திரிபுபடுத்தும் வகையிலான போதனைகளை இந்த நபர் முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவலோகிகேஷ்வர என்ற பெயரால் குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.
புத்தருக்காக உடலை எரித்துக் கொள்ளுமாறு இவர் தனது அடியார்களுக்கு போதனை செய்வதாக பலாங்கொட காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இவ்வாறான மத போதகர்களினால் பலர் தவறான தூண்டுதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் மீண்டும் ஒரு மத போதகர் அடியார்களை தவறான முடிவை மேற்கொள்ளுமாறு அல்லது உயிரை மாய்த்துக் கொள்ளுமாறு தூண்டுதல் பாரிய குற்றச் செயலென காஷ்யப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நபர் நாட்டுக்கு வருகை தர முன்னதாகவே குறித்த நபர் தொடர்பில் குற்ற விசாரணை பிரிவிற்கும், ஏனைய உரிய தரப்புகளுக்கும் தகவல்கள் வழங்கிய போதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் தனது மகளை தகாத தீண்டலுக்கு உட்படுத்திய நபர் என காஷ்யப்ப தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் இந்த நபர் நாய்களை பராமரித்து கொண்டிருந்தவர் எனவும் நாட்டுக்கு திரும்புவதற்கு கூட பணம் இல்லாமல் ஏனைய இலங்கையர்கள் பணம் திரட்டி நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு நபரின் பின்னாலேயே கண்மூடித்தனமான அடியார்கள் பின் தொடர்வதாகவும் பௌத்த பிக்குணிகளும் இவரை வணங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நபர் தேரவாத பௌத்தத்தை விமர்சனம் செய்து மஹாநாயக்க பௌத்த கொள்கைகளை போற்றும் வகையிலான திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதாக தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் பௌத்த துறவி அல்ல எனவும் மனநோயாளி எனவும் இவருக்கு மனநோய் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமெனவும் காஷ்யப்ப தேரர் கோரியுள்ளார்.