இலங்கை

தாய், தந்தை மரணம்: உயர்தர பரீட்சை எழுதும் மகள்

Published

on

பத்தேகம ஹல்பதோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கணவன் – மனைவி உயிரிழந்துள்ளனர்.

கடந்த 6 ஆம் திகதி மாலை கெப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பிரசன்ன குருசிங்க என்ற 42 வயதுடைய நபரும் 38 வயதுடைய கங்கா நில்மினி என்ற அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தம்பதியினரின் பிரேத பரிசோதனை நேற்று காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி மகேஷ் தர்மரத்னவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“என் அம்மாவும் அப்பாவும் இறந்து விட்டார்கள். நான் அம்பேகம கல்லூரியில் படிக்கிறேன். இந்த ஆண்டு உயர்தர பரீட்சை எழுதுகிறேன். தம்பி அதே பாடசாலையில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் எதிர்பார்ப்புடன் மத்துகம பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் அம்மா பயிற்சி பெற்று வந்தார்.

கடந்த 6ம் திகதி பயிற்சி முடிவடைந்ததால், தாயை அழைத்து வர தந்தை மோட்டார் சைக்கிளில் சென்றார். வீட்டுக்கு வரும்போது அம்மா என்னை தொலைபேசியில் அழைத்து மழையால் வீட்டிற்கு வர தாமதமாகிவிடும் என்பதனால் தனியாக இருக்காமல் அயல் வீட்டிற்கு செல்லுமாறு கூறினார்.

இரவு 9.00 மணியளவில் தாயும் தந்தையும் விபத்துக்குள்ளாகி எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் என உயிரிழந்த தம்பதியின் மூத்த மகள் தெரிவித்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியை வர்த்தகரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version