அரசியல்
கரிசனை காட்டுங்கள்: ரணிலிடம் சம்பிக்க கோரிக்கை
‘யுக்திய’ நடவடிக்கையின் முடிவு குறித்து ஆழ்ந்த கரிசனை காட்டுமாறு ஜனாதிபதியிடம் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ‘யுக்திய’ நீதி நடவடிக்கையில் பெற்றோர்கள் இருவர் கைது செய்யப்படும்போது, அவர்களது வீடுகளில் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது, பாதாள உலக செயற்பாடுகளில் சிறுவர்கள் இணையவும், சிறுமிகள் விபச்சாரத்திற்கு செல்லவும் வழியேற்படுகின்றது என்றும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு உட்பட பல பகுதிகளில் பல பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு வழங்க யாரும் இல்லை.
அத்துடன், சில குழந்தைகளுக்கு கூலித் திறன் இல்லை என்பதோடு சட்டத்தரணிகளுக்கு செலுத்த பணம் இல்லை என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்னும் போதைப்பொருள் விநியோகத் தொழிலின் சுறாக்களை பொலிஸார் கைது செய்ததாக எந்த செய்தியும் வரவில்லை.
முக்கிய சந்தேகநபர்களின் பெயர்கள் பெரும்பாலும் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பொலிஸாரால் இன்னும் அவர்களை கைது செய்ய முடியவில்லை.
மேலும், கடந்த நாட்களில் கனரக வாகனங்களை பயன்படுத்தி கடற்கரையில் உள்ள விருந்தகங்களை பொலிஸார் தகர்த்துள்ளனர்.
கடற்கரையில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற கடலோர பாதுகாப்பு துறைக்கு முழு அதிகாரம் உள்ளது.
எனினும், அவற்றை அகற்ற நீதிமன்ற உத்தரவு பெறுவதற்கு பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றி, போதைப்பொருள் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தில் அந்த கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுவது சட்டத்திற்கு எதிரானதாகும்.
தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தகங்களை தகர்ப்பதற்கும் மற்றைய விருந்தகங்கள், தமது தொழிலைத் தொடர அனுமதிப்பதற்கும் இடையில் முக்கியமான தொடர்பு இருப்பதாக ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.