இலங்கை

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி: கெஹலிய மீது குற்றச்சாட்டு

Published

on

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் அறிவுறுத்தல்களையே தாம் பின்பற்றியதாக தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதியில் கைதுசெய்யப்பட்ட முதலாவது சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

நிறுவன உரிமையாளர் சார்பில் நேற்று (28.12.2023) மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரமவின் முன்னால் முன்னிலையான சட்டத்தரணி ஜாலிய சமரசிங்கவே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சுமார் ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியான மக்கள் பணத்தில் மருத்து மோசடி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்னரே அறிந்திருந்தாரா என மாளிகாகந்த நீதவான், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வினவினார்.

தரக்குறைவான மனித இம்யூனோகுளோபுலின் உடன்படிக்கையை மேற்கொள்ளுமாறு தமக்கு உத்தரவு பிறப்பித்ததாக, தமது கட்சிகாரர்களாக இருவர் வாக்குமூலம் வழங்கியபோதும், குற்றப்புலனாய்வுத்துறையினர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை சந்தேகநபராக பெயரிட தவறியுள்ளனர் என்று வழக்கில் சந்தேகநபர்கள் இருவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜாலிய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேகநபர்களின் மேலதிக வாக்குமூலங்களை நேற்று (28.12.2023) சிறைச்சாலை வளாகத்தில் பதிவு செய்யுமாறு நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையின் ஆரம்பத்தில் பிரதி சொலிசிட்டர், ஜெனரல் லக்மினி கிரிஹாகம, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அத்துடன் விஜித் குணசேகர மற்றும் ஏ.எம்.பி.கே அல்வீர ஆகிய இரு அதிகாரிகளிடம் மேலதிக வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த விஜித் குணசேகரவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் நீதிமன்றை கேட்டுக்கொண்டார்.

குறித்த மருந்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அதற்கான ஆங்கில நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அதன் சிங்கள மொழி பெயர்ப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோரியுள்ளதாகவும் டி.எஸ்.ஜி.கிரிஹாகம தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யவில்லை என்று ஆறாவது சந்தேகநபர் ஜானக சிறி சந்திரகுப்தவின் சட்டத்தரணி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னதாக தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் பேரில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உட்பட ஆறு பேர் சந்தேகத்தின்பேரில் ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version