இலங்கை

நாட்டில் வேகமாக பரவும் மற்றுமொரு நோய்

Published

on

நாட்டில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் முதல் நாட்டில் 700 க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்கள் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மே 23 ஆம் திகதி முதல் தட்டம்மை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர் முதல் தட்டம்மை நோயாளர் என அடையாளம் காணப்பட்டதையடுத்து, நோயாளர்கள் பதிவாகத் தொடங்கியதாகவும், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கல்முனைப் பிரதேசத்திலும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரால் அண்ணளவாக 16 பேருக்கு இந்நோய் பரவக்கூடும் என்றும், தட்டம்மை என்பது மோபிலி வைரஸ் இனத்தைச் சேர்ந்த பெராமிக்ஸோ வைரஸால் மிகவும் வேகமாக பரவும் நோயாகும்.

சுவாசக்குழாய் வழியாக உடலினுள் நுழையும் வைரஸ் நோயின் அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தென்படும் எனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் பிரதான அறிகுறிகளாக காய்ச்சல், தடிமன், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்கள் சிவத்தல் என்பன காணப்படுகின்றன.

இலங்கையில் மீண்டும் பதிவாகும் தட்டம்மை நோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனமும் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதனால், நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கை ‘தட்டம்மை’ நோயை இல்லாதொழித்த நாடாக அங்கீகரித்ததன் பின்னணியில், இந்நோயின் மீள் எழுச்சி மிக முக்கியமாக காணப்படுகின்றது.

Exit mobile version