இலங்கை

மீண்டும் முகக்கவசம் அணியுங்கள்: பொதுமக்களிடம் கோரிக்கை

Published

on

நாட்டுமக்களை மீண்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் நாட்டில் நோய்ப்பரவல் தொடர்பில் அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் ஜே.என்.01 (JN 1 OMICRON) உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு பரவி வரும் நிலையிலேயே அமைச்சர் இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் மீண்டும் கொவிட் – 19 தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஜே.என்.01 கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் 41 நாடுகளில் பரவியுள்ளது. இலங்கையில் பரவும் அபாயம் இருக்கின்றதா என்பது தொடர்பில் அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

இலங்கையை பொருத்தவரை அந்த தொற்று பரவும் அபாயம் குறைவாக இருந்த போதிலும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுவது பாதுகாப்பானதாகும்.

நாட்டில் கொவிட் கட்டுப்பாட்டுக்கான பரந்த தடுப்பூசி திட்டம் நடைமுறையில் இருந்தாலும், நாட்டு மக்கள் கொவிட்டில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு முகக்கவசம் அணிந்து கொள்வது உகந்தது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொவிட் காலத்தில் போன்று மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம் உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version