இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெறுங்கள்

Published

on

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெறுங்கள்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கோவிட் மாறுபாடு இலங்கையிலும் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் வைத்ய சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

தனது ‘எக்ஸ்’ கணக்கில் குறிப்பொன்றினை பதிவிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

JN.1 கோவிட் விகாரம் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகின்றது. ஒமிக்ரோன் கோவிட்டின் துணை வகையாகக் கருதப்படும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2669 ஆக உள்ளது.

கேரள மாநிலத்தில் பரவிய JN.1 கோவிட் துணை வகை கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் பரவியுள்ளதாக அறிக்கைகள் மேலும் குறிப்பிடுகின்றன.

கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு இந்திய சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கோவிட் மாறுபாடு குறித்து கவனம் செலுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கோவிட் மாறுபாடு ஏற்கனவே இலங்கை சமூகத்தில் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த கோவிட் தொற்று தற்போது இலங்கையில் காணப்படுகின்ற நோய் நிலைமைகளை போன்றே ஏற்படக்கூடும்.

காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை இழப்பு, அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், சாப்பிடுவதில் சிரமம் மற்றும் வாந்தி ஆகியவை JN.1 கோவிட் துணை வகையின் அறிகுறிகளாகும்.

இதன் காரணமாக, இந்த அறிகுறிகளைக் கொண்டவர்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும்.

குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் பூஸ்டர்களைப் பெற வேண்டும்.காற்றோட்டம் இல்லாத, நெரிசலான, மூடப்பட்ட இடங்களில் சுற்றித் திரிபவர்கள் முகமூடி அணிவது நல்லது.

இந்த கோவிட் வைரஸை சாதாரண வைரஸாகக் கருதக்கூடாது என்றும், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் உள்ளிட்ட நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version