இலங்கை

இரு வாரங்களுக்குள் வெளியாகவுள்ள நிதி அமைச்சின் அறிவிப்பு

Published

on

இரு வாரங்களுக்குள் வெளியாகவுள்ள நிதி அமைச்சின் அறிவிப்பு

வற் வரி விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களின் வகைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தனித்தனியாக எந்தெந்த பொருட்கள் அந்த வகைகளில் உள்ளடங்கும் என்பது நிதி அமைச்சினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். வரி கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் நாம் எதிர்பார்க்கும் இலக்கை எம்மால் அடைய முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபத ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமையானது கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகளை செயற்படுத்தல் என்பவற்றில் மிக முக்கியத்துவமுடையதாக அமைந்துள்ளது.

இரண்டாம் கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதன் ஊடாக 334 மில்லியன் டொலர் விரைவில் கிடைக்கவுள்ளது. இதன் மூலம் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி என்பவை இணங்கிய கடன் தொகையை விடுவிப்பதாக அறிவித்துள்ளன.

மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உதாசீனப்படுத்தி செயற்படுவதற்கு நாம் தயாராக இல்லை. ஆனால் இவ்வாறான தீர்மானங்களை எடுத்திருக்காவிட்டால், 2022ஐ விட மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்.

வரவு – செலவு நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அரச வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதே எமது இலக்காகும். எனவே அரசியல் கொள்கைகளின் ஊடாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

வற் வரி விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களின் வகைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தனித்தனியாக எந்தெந்த பொருட்கள் அந்த வகைகளில் உள்ளடங்கும் என்பது நிதி அமைச்சினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். வரி கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் நாம் எதிர்பார்க்கும் இலக்கை எம்மால் அடைய முடியாது.

கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் பின்னர், கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பொருளாதார நெருக்கடிகளால் இடைநிறுத்தப்பட்டுள்ள 200 அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

2021 இறுதியில் நேர் பெறுமானத்தில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வீதம், அதன் பின்னரான 6 காலாண்டுகளில் மறை பெறுமானத்திலேலேயே காணப்பட்டது.

எனினும் 2023 மூன்றாம் காலாண்டின் பின்னர் மீண்டும் பொருளாதார வளர்ச்சி வேகம் நேர் பெறுமானத்தில் செல்ல ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்தும் பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இலங்கையிலுள்ள கண்காணிப்பு அமைப்புக்கள் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பொறுப்புடன் கணிப்புக்களை மேற்கொண்டு தரவுகளை வெளியிட வேண்டும்.

கடந்த காலங்களில் சில நிறுவனங்களால் நாணய நிதியம் தொடர்பில் வெளியிடப்பட்ட கணிப்புக்கள் தவறானவையாகும். நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகைக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இப்போதிலிருந்தே நாணய நிதியத்தின் அடுத்த மீளாய்வுக்கும் தயாராகின்றோம். வரி அதிகரிப்பானது 2 சதவீதம் பணவீக்கத்தில் தாக்கம் செலுத்தும். எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று நாம் கூறவில்லை. அதற்காக மக்களுக்கு சாதகமான தீர்மானங்களை எடுத்திருந்தால், 2022ஐ விட மோசமான நிலைமைக்கு சென்றிருப்போம்.

எவ்வாறிருப்பினும் எம்மால் எடுக்கப்பட்ட அவ்வாறான தீர்மானங்களின் பிரதிபலனாகவே நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 667 மில்லியன் டொலரும், உலக வங்கியிடமிருந்து 1300 மில்லியன் டொலரும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1553 மில்லியன் டொலரும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version