இலங்கை

அம்பாறை மாவட்ட விவசாயிகளின் துன்பங்கள் தீர்க்கப்பட வேண்டும்

Published

on

அம்பாறை மாவட்ட விவசாயிகளின் துன்பங்கள் தீர்க்கப்பட வேண்டும்

விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதில் அம்பாறை மாவட்ட மக்கள் மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் விசனம் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை என்பது ஒரு விவசாய நாடு. விவசாயத்தினை மேம்படுத்துவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு உரிய அமைச்சர், நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட எங்களைப் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இருக்கின்றது இல்லை என்று யாரும் சொல்லவில்லை.

இருந்தாலும் மொத்த தேசிய உற்பத்தியிலே 25 வீதத்தை கிழக்கு மாகாணம் வழங்கும் நிலையில் அதிலும் அம்பாறை மாவட்டம் மொத்த உற்பத்தியில் சுமார் 22 வீத உற்பத்தியை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இருப்பினும் இந்த விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதில் எமது மக்கள் மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

கடந்த பெரும்போகத்திலும் கூட பல நஸ்டங்கள் அவர்களுக்கு ஏற்பட்டன. அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அந்த நெல் கொள்வனவு செய்யப்படவில்லை என்ற நிலையும் இருந்தது.

இருப்பினும் இறுதிக் கட்டத்திலேயே அரசாங்கம் அந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது. இந்த நேரத்தில் நான் அமைச்சரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

பொலநறுவை, அனுராதபுரம், குருநாகல் போன்ற மாவட்டங்களிலே அறுவடை ஆரம்பிக்கப்படுகின்ற போதே நெல் சந்தைப் படுத்தல் சபையினால் அந்த நெற்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன ஆனால் எமது பிரதேசங்களில் அவ்வாறான நடைமுறை கையாளப்படவில்லை.

எனவே எதிர்காலத்தில் எமது பிரதேசங்களில் காலம் தாமதியாமல் அறுவடை ஆரம்பிக்கும் போதே கொள்வனவு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

எமது மாவட்டங்களில் நெல் உற்பத்திகளை எமது விவசாயிகள் விரிவுபடுத்தி இருந்தாலும், எமது விவசாயிகளுக்கு போதிய விளக்கங்கள் வழங்கப்படுவதில்லை.

அம்பாறை மாவட்டத்திலே அதிகளவான உற்பத்திகளை மேற்கொள்ளும் நிலங்கள் இருக்கின்றன.

அந்த இடங்களிலே நாங்கள் அதிகாரிகளை அழைத்து நில ஆய்வுகளை மேற்கொள்ளும் போது காலம் தாமதமாகி அந்த முடிவுகள் எமக்கு கிடைக்கப்பெறுகின்றன.

இது எமது விவசாயத் திணைக்களத்தில் உள்ள பிரச்சினையா அல்லது எமது பிரதேசங்களில் அதற்கான கருவிகள் இல்லையா என்கின்ற பல கேள்விகளும் இருக்கின்றன.

இந்த விடயங்களையும் நீங்கள் கருத்திற் கொள்ள வேண்டும். மேலும், தாங்கள் உழைப்பதற்கும் மேலதிகமான செலவுகளை மேற்கொள்ளும் நிலைமைகளே இருக்கின்றன.

இந்த நிலைமகள் மாற்றப்பட வேண்டும். எனவே அம்பாறை மாவட்டத்திலே பல நெல் சந்தைப்படுத்தல் நிலையங்களை உருவாக்கி குறித்த காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலேயே அந்த நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்திலே ஆசியாவிலேயே பெயர் பெற்ற அரிசி ஆலை இருந்தது. இன்று அது இல்லை.

வடக்கு கிழக்கு பிரதேசங்கள் யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு பல கைத்தொழில் பேட்டைகள் இன்று இருந்த இடமே இல்லாமல் இருக்கின்றது. இவ்வாறான நிலையில் அந்த பிரதேசங்களை எவ்வாறு நீங்கள் அபிவிருத்தி செய்ய முடியும்.

விவசாயத்தை மேம்படுத்த வேண்டுமானால் விவசாயிகளைக் கவரக் கூடிய நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.

தற்போது அதிகளவான விவசாயிகள் விவசாயத்தினைக் கைவிட்டு வெளிநாடு செல்லும் நிலைமையே இருக்கின்றது. ஏனெனில் அவர்களின் உற்பத்தியை விட செலவு அதிகம் என்பதால்.

எனவே எதிர்காலத்தில் இந்த விவசாயத்தை மேம்படுத்தக் கூடிய வேலைகளையும், உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லை உரிய விலையில் இலகுவாக அவர்கள் விற்பனை செய்யக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அத்துடன், கல்முனை கரவாகு, நற்பட்டிமுனை வடக்கு, நற்பட்டிமுனை மேற்கு என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்திலே 2005 தொடக்கம் 2010ம் ஆண்டு காலப்பகுதியிலே நியாப் திட்டத்தினூடாக பத்து வகையான திட்டங்களை முன்மொழிந்து அந்த பணிகளை ஆரம்பித்திருந்தார்கள். அதில் சுமார் 959 ஏக்கர் மிகவும் வளம்மிக்க நிலமாக இருக்கின்றது.

ஆனால் மழை காலத்திலே வெள்ளம் ஏற்படுவதனால் அவர்கள் ஒரு போகம் மாத்திரமே செய்கின்றார்கள்.

இந்த நிலத்தில் பெரும்போக வேளாண்மை மேற்கொள்ளும் முகமாகவே அந்த பத்து திட்டங்க முன்னெடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் அது நிறைவுறும் முன்னமே அந்த திட்டம் முடிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் சிறுபோக காலத்திலும் கூட நீர் பெருக்கெடுத்து வேளாண்மையை நாசம் செய்த விடயமும் இடம்பெற்றிருக்கின்றது.

எனவே அந்த நியாப் திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு பத்து திட்டங்களையும் பூர்த்தி செய்வதன் ஊடக அந்த நிலத்தில் இரண்டு போகங்களையும் மேற்கொண்டு அந்த விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதாக அமையும்.

எனவே அந்த நியாப் திட்ட செயற்பாடுகளை முழுமையாகப் பூர்த்தி செய்யக் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அது மாத்திரமல்ல கௌடா தீவு என்று சொல்லப்படுகின்ற அந்த இடமும் ஆற்றங்கரையை அண்டிய சவளக்கடை, நாவிதன்வெளி, காரக்குடா, குடியிருப்புமுனை, அண்ணமலை போன்ற பிரதேசங்களை அண்டிய 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலத்தில் வெள்ளத்தினால் உவர் நீர் பரவி அந்த விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

அந்த நிலங்களுக்கும் அணைக்கட்டுக்களை உரிய முறையில் அமைப்பதன் ஊடாக அந்தப் பிரதேசத்திலும் விளைச்சலை அதிகரிக்கக் கூடிய நிலைமை இருக்கின்றது.

இந்த விடயத்தினையும் விரைவுபடுத்தி மேற்கொண்டு தர வேண்டும். 1952, 1956 காலப்பகுதியிலே கல்லோயாத் திட்டத்தினூடாக திருக்கோவிலிலே வலதுகரை வாய்க்கால் என்று சொல்லப்படுகின்ற அந்த வாய்க்கால் திட்டமானது அப்போதைய பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா அவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்து.

ஆனால் அது இடைநடுவில் கைவிடப்பட்டது. திருக்கோவில், ஆலையடிவேம்பு போன்ற பிரதேசங்களிலே சுமார் 20000 ஏக்கருக்கும் மேற்பட்ட பூமிகள் வானம் பார்க்கின்ற பூமிகளாகவே இருக்கின்றன.

எனவே அந்த திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துகின்ற போது அங்கு விவசாயம் மட்டுமல்லாது கால்நடை வளர்ப்பு, மேட்டுநிலப் பயிர்ச்செய்கை கூட சிறப்பாக முன்னெடுக்கப்பட முடியும்.

இந்த திட்டம் தொடர்பான முன்மொழிவுகள் பிரதமர் அணமையில் அம்பாறைக்கு வருகை தந்த போது எமது மக்களால் வழங்கப் பட்டிருக்கின்றன. இந்த திட்டம் முழுமையடைகின்ற போது அப்பிரதேச மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துபவர்களாக விளங்குவார்கள்.” என்றார்.

Exit mobile version